நேரு
- முதலில், அவர் மகாத்மா காந்தியின் முதல் சீடன்; அடுத்து, அவர் மகத்தான காங்கிரஸின் முக்கிய வீரன்; அதற்கும் அடுத்து, அவர் உலகிலேயே அதிக மக்களின் இதயங்களை வென்ற இனிய தோழன்; இறுதியாக, அவர் தான் நவீன இந்தியாவை உருவாக்கிய நவயுக அசோகன்… இப்படி பத்து, நூறு, ஆயிரம் சிறப்புப் பெயர்களை சொல்லிக்கொண்டே போகலாம். ஆகவே தான், சிரமத்தை குறைக்கும் நோக்கில் அனைவரும் அவரை ‘நேரு’ என்று அழைப்பார்கள்!
- ‘தலைவர்கள் பிறப்பதில்லை; உருவாகிறார்கள்…’ என்ற பதத்திற்கு சரியான உதாரணம், ஜவஹர்லால் நேரு. பிறப்பின் அடிப்படையில் பார்த்தால், அவர் உயர்சாதி ஒன்றில் பிறந்தவர். பொருளாதார அடிப்படையில் பார்த்தால், அவரது தந்தை உத்திரப்பிரதேசத்தின் மிகப்பெரிய செல்வந்தர். ஆனால், நேரு உயர்சாதி என்றோ, வசதியான குடும்பம் என்றோ எந்த பெருமையும் கொள்ளவில்லை. ‘இதுவல்ல நான்; இந்த சமூகத்துக்கு என்ன ஆற்றுகிறேனோ, அதுவே நான்…’ என்று அவர் முடிவெடுத்தார். 1910ம் ஆண்டுக்கு பிறகு சுதந்திர போராட்ட களத்திற்கு வந்தார், நேரு. மொத்தம் 9 ஆண்டுகள் அவர் இந்திய மக்களுக்காக ஆங்கிலேயன் அளித்த சிறைத்தண்டனைகளை அனுபவித்தார்!
- இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலை நேரு நடத்திக்காட்டிய விதத்தைப் பார்த்தால், கண்களில் கண்ணீர் வரும்! ‘உலகத்தின் மிகப்பெரிய கேலிக்கூத்து…’ என்று ஊடகங்கள் அதை நகையாடின. ஆனால், அனைத்து விமர்சனங்களையும் கடந்து இந்தியாவின் முதல் தேர்தலை ஒரு திருவிழா போல நடத்திக் காட்டினார், நேரு! நிறைய ஊர்களில் மக்களுக்கு தனியாக பெயர்களே இல்லை. எல்லோரும் அவர்களின் குலத்தின் பெயரையே சொன்னார்கள். நேருவின் அரசு அவர்களுக்கு பெயரைக் கொடுத்தது. அந்தப் பெயருக்கு பின்னால் ஒரு முகவரியை கொடுத்தது. மொத்தம் 489 இடங்கள். 1949 வேட்பாளர்கள். அப்போது இந்தியாவின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 36 கோடி. அதில், வாக்களிக்கும் உரிமை பெற்றவர்களென 17 கோடி பேர் பட்டியலிடப்பட்டனர். வாக்குச்சாவடிகளில் இன்று இருப்பது போல ஒரே ஒரு வாக்குப்பெட்டி எல்லாம் அன்று இல்லை. கட்சிகளின் வகைகளுக்கேற்ப பல வண்ணங்களில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டன. மக்கள் அவர்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் கட்சியின் வண்ணப்பெட்டியில் வாக்கை அளிக்க வேண்டும். ஏறத்தாழ, 1951 அக்டோபர் முதல் 1952 பிப்ரவரி வரை, 5 மாதங்கள் நடந்தது அந்தத் தேர்தல். தேர்தல் முடிவில், 364 இடங்களில் வென்று ஆட்சியமைத்தது காங்கிரஸ். நேரு, புல்பூர் தொகுதியில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வென்றார். அந்த நாள் இந்திய வரலாற்றின் இணையற்ற நாள்! உலகத்தின் விழிகளை உற்றுப்பார்த்து, ‘My name is Nehru. And, now I am elected Prime Minster of India..’ என்று கம்பீரமாக சொன்னார், நேரு!
- சர்வாதிகாரத்திற்கு எதிரான மிகப்பெரிய ஆயுதம், நேரு. 1950களில் தொடர்ச்சியாக நேருவை கடுமையான விமர்சித்த பெருமைக்குரியது Illustrated Weekly பத்திரிகை. ஆர். கே. டால்மியா தான் அதன் ஆசிரியர். ஒரு கட்டத்தில், தனிப்பட்ட முறையில் நேருவையும் இந்திராவையும் தாக்குகிறார், டால்மியா. நேரு அப்போது சகல அதிகாரமும் கொண்ட பிரதமர் பதவியில் இருந்தார். அவர் நினைத்திருந்தால் டால்மியாவையும் அவரது பத்திரிகையையும் என்ன வேண்டுமானால் செய்திருக்கலாம். ஆனால், மிகவும் சாதாரணமாக ‘என்ன எழுதுகிறார்கள்? இனிமேல் இந்த குப்பைகளை நம் வீட்டுக்கு வாங்காதீர்கள்…’ என்று உதவியாளருக்கு செய்தி அனுப்புகிறார். அவ்வளவு தான் நேருவின் எதிர்வினை! பின்னொரு முறை, ‘இந்த நேருவுக்கு ஆணவம் அதிகரித்துவிட்டது. இப்படியே போனால், மிகப்பெரிய சர்வாதிகாரியாக மாறிவிடுவான்…’ என்று, அவரே அவரை விமர்சித்து ஒரு கேலிச்சித்திரத்தை வெளியிட்டார். வாய்ப்பே இல்லை… ஒரு தலைவன் எந்த அளவுக்கு சகிப்புத்தன்மையோடும், ஜனநாயகத் தன்மையோடும் இருக்கவேண்டும் என்பதற்கு, நேருவே உலகளாவிய ஒரே உதாரணம்!
- 1947ல் நேருவை தவிர யார் பிரதமராக வந்திருந்தாலும், இந்தியா இன்று அடைந்திருக்கும் வளர்ச்சியை நிச்சயம் எட்டியிருக்காது. ஏனென்றால், அப்போது தேசமெங்கும் அழுகுரல்கள். வரலாற்றிலேயே மிகப்பெரிய பிரிவினையை நாடு சந்தித்திருந்தது. உலக ஊடகங்கள், ‘இந்த நாடே ஒரு மிகப்பெரிய மனநல மருத்துவமனையாக காட்சியளிக்கிறது. எவர் எங்கே என்ன செய்கிறார்கள் என்பதே தெரியவில்லை. இதை மீள எழுப்புவது ஒரு தலைமுறையில் நடக்கக்கூடிய காரியம் அல்ல…’ என்று எழுதின. ஆனால், சிறிதேனும் ஒளியில்லாத எந்த இருள்வெளியும் இங்கே இல்லை. அப்படி ஒரு சிறிய ஒளியென, இல்லை, பெரிய ஒளியாகவே வந்து நின்றார், நேரு! ’இந்த நாடு வீழவேண்டும் என்பது தான் உங்களின் விருப்பமென்றால், அதுவே படைத்தவன் வகுத்த விதியும் என்றால், இரண்டையுமே நான் உடைக்கிறேன். உங்களுக்கு விழியென்று இரண்டு இருந்தால், அதில் பார்வை என்று ஒன்று இருந்தால் கூர்ந்து பார்க்கவும். உங்களுக்கு முன் நிற்கும் நான் நேரு அல்ல, காந்தியின் தலைமைச்சீடன், படேலின் முதன்மை தோழன். என் ஆற்றலை நான் நிரூபிக்கிறேன்…’ என்று அறிவித்தார் நேரு. எவருமே நினைத்துப் பார்க்கமுடியாதபடி, பத்தே ஆண்டுகளில் இந்தியாவை தூக்கி நிறுத்தினார், அவர். அதை பின்னாளில் எழுதிய ஒரு ஆய்வாளர், ‘இரண்டு மலைகளுக்கு நடுவே கயிறுகட்டி, அதன்மேல் கைகளில் கம்பேதும் இல்லாமல் நடப்பது எத்தகைய சாகசமோ, அத்தகைய சாகசம் நேரு செய்தது…’ என்று எழுதினார். உண்மையில், அந்த உதாரணமே சற்று அமைதியானது தான் நேருவின் பங்களிப்புக்கு முன்னால்!
- அப்படி நேரு செய்த சாதனைகள் என்னென்ன? ஐஐடி (IIT), எய்ம்ஸ் (AIIMS), பார்க் (BARC), இஸ்ரோ (ISRO) என இந்தியாவின் மிகப்பெரிய அமைப்புகளை உருவாக்கியவர், நேரு தான். அதுவும், பார்க் மற்றும் இஸ்ரோவை தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி உருவாக்கி நிலைநிறுத்தினார், நேரு! ஏனென்றால், அன்று அணு ஆராய்ச்சி குறித்தோ, விண்வெளி ஆராய்ச்சி குறித்தோ எவருக்கும் இங்கே சாதகமான பார்வை இல்லை. நேரு, ஹோமி பாபாவையும் விக்ரம்சாராபாயையும் ஒருபுறம் பாதுகாத்தபடி, இன்னொருபுறம் அவர்களுக்கான தடைகளையும் உடைத்து முன்நகர வைத்தார். இந்தியாவின் பெரும்பாலான அணைக்கட்டுமானங்கள் மற்றும் தொழிற்சாலைகள் நேரு உருவாக்கியவை. முக்கியமாக, அணைகளை நவீன இந்தியாவின் ஆலயங்கள் என்றே நேரு அழைத்தார். அவர் ஆட்சியில், பக்ரா – நங்கல் அணை, பிலாய் இரும்பு ஆலை, பொக்காரோ இரும்பு ஆலை என இந்தியா, கட்டமைப்பு வசதியில் மிகப்பெரிய உச்சத்தை எட்டியது!
- நேருவின் ஒரு புகைப்படம் இருக்கிறது. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த அந்த நள்ளிரவுக்கு முன்னால் எடுத்தது, அது. அதில், நாடாளுமன்ற கட்டிடத்தின் முகப்பு மாடத்தில் சுவற்றின் மேலே காலை வைத்து நின்று, மக்களை கட்டுப்படுத்திக் கொண்டிருப்பார், நேரு! உண்மையில், இப்படிப்பட்ட ‘Thug Life’ தோரணையுடன் தான், வாழ்வு முழுவதுமே வெளிப்பட்டார், நேரு. இன்னொரு உதாரணம். காந்தி அப்போது நவகாளியில் உண்ணாவிரதம் தொடங்கியிருந்தார். ‘மத வன்முறை இப்போதே நிற்கவேண்டும்’ என்பது காந்தியின் கோரிக்கை. நேரு, காந்தியை காண வருகிறார். அப்போது கூட்டத்தில் எவரோ ஒருவர், ‘காந்தியை கொல்லுங்கள்…’ என்று கத்துகிறார். அது நேருவுக்கு கேட்கிறது. ஓடிச்சென்று அந்த வார்த்தையை சொன்னவரின் கன்னத்தில் அறைந்து, ‘இதற்கு நீ வெட்கப்பட வேண்டும்…’ என்று சொல்கிறார், நேரு. டெல்லியின் கலவர நாட்களில், நேரடியாகவே களத்தில் இறங்கி பலபேரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கிறார், நேரு. ஆம், நேரு காந்தியைப் போல இந்தியாவை சுற்றியவரில்லை. ஆனாலும், காந்தியை விட அதிகமான களச்செயல்பாட்டு அறிவு நேருவுக்கு இருந்தது!
- இந்தியாவுக்கு நேரு அளித்த மிகவும் முக்கியமான மற்றும் அவசியமான பங்களிப்பு ‘இந்து சட்டம்’. அம்பேத்கரின் வாழ்நாள் கனவு அது. ஆனால், நாடாளுமன்றத்தில் இருந்த மரபுவாதிகளின் எதிர்ப்பால், அவரால் அதை நிறைவேற்ற முடியவில்லை. 1951 அக்டோபர் மாதம், அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியில் இருந்து விலகியபோது, நேரு அவையில் தான் இருந்தார். அப்போது அவர் எதுவும் சொல்லவில்லை. ‘உன் இலக்கு இனி என் இலக்கு…’ என்ற உறுதி மட்டும், அவரது பார்வையில் இருந்தது. அடுத்த ஐந்தே ஆண்டுகளில் அம்பேத்கரின் இலக்கை வென்றெடுத்தார், நேரு. இந்து சட்டத்தை நான்கு பகுதிகளாக ( Hindu Marriage Act, Hindu Succession Act, Hindu Minority and Guardianship Act, Hindu Adoptions and Maintenance Act ) பிரித்து நிறைவேற்றி காட்டினார், நேரு. அதைப் பார்த்துவிட்டே அம்பேத்கர் கண்மூடினார்!
- இட ஒதுக்கீடு குறித்து ஆரம்பத்தில் நேரு தெளிவில்லாமல் இருந்தது உண்மை. ‘என் மக்களை எப்படி நானே பிரித்து பார்ப்பது…’ என்ற எண்ணம் மட்டுமே அவரை இட ஒதுக்கீட்டு அம்சத்தை அச்சத்துடன் நோக்கவைத்தது. எல்லோரும் எல்லாவற்றிலும் ஞானத்துடன் இருக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பது தவறானது அல்லவா! ஆனாலும், நேருவுக்கு இட ஒதுக்கீட்டின் நியாயத்தை புரிந்துகொள்ளும் அளவுக்கு மனம் இருந்தது. அவர் புரிந்துகொள்ளாவிட்டால், அந்த இடத்திற்கு பின்னாட்களில் வந்த எவருமே புரிந்துகொண்டிருக்கமாட்டார்கள். இட ஒதுக்கீட்டை அவர் ஏற்றார். நாடு முழுவதும் பிற்படுத்தப்பட்டோர் கணக்கெடுப்பை நடத்தும் படி, காகா கலேல்கர் ஆணையத்தை அவர் அமைத்தார் (தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மக்களுக்கு ஏற்கனவே , அதாவது 1954ம் ஆண்டே அரசியலமைப்புச் சட்டத்தில் இட ஒதுக்கீட்டை உறுதிசெய்திருந்தார், நேரு). இன்று இந்தியா முழுவதும் அமலில் இருக்கும் இட ஒதுக்கீட்டு முறைக்கு, நேரு அடைந்த மனமாற்றமே உண்மையான அடித்தளம்! இன்னொரு புறம், இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் அமையவும் நேருவின் தொலைநோக்கே காரணம்!
- எதை வேண்டுமானாலும் சந்தேகிக்கலாம், ஆனால், நேருவின் மதச்சார்பின்மையை எவரும் சந்தேகிக்க முடியாது. காந்தியிடம் இருந்து அவர் அந்த சமரசமே இல்லாத மதச்சார்பின்மை பார்வையை எடுத்துக்கொண்டார். நேரு, இந்தியாவின் எதிர்கால ஆபத்தென கருதியதும், மத அடிப்படைவாதி களையே. உதவியாளர் மத்தாய் உடனான ஒரு தனி உரையாடலில், ‘இந்தியாவிற்கு தீங்கு தீவிர இடதுசாரிகளாலா வருமென்று நீ நினைக்கிறாய்… இல்லை, இந்தியாவின் பேராபத்து எப்போதும் மத அடிப்படைவாதிகளே’ என்று சொல்கிறார், நேரு. அதுவே பின்னாளில் நடந்தது! நேருவின் ஆட்சி இருக்கும் வரை தலைதூக்க துணியாத மத அடிப்படைவாதிகள், நேருவின் மறைவிற்கு பிறகு வெளியே வந்து அரசியல் பலம் பெற்றார்கள். வட இந்தியாவில் மதமோதல்களை ஒரு தினசரி நிகழ்வாக அவர்கள் மாற்றினார்கள். இன்றும் நேருவே அவர்களின் முதல் மற்றும் முக்கிய குறி!
- ஐந்தாண்டு திட்டங்களை சோவியத் மாடலை அடிப்படையாக கொண்டே உருவாக்கினார், நேரு. ஆனால், அதை அழகாக பாகம்பிரித்து நடைமுறைப் படுத்தினார்! அதுவும், 1950 -1960 கள் இந்தியாவின் மிகமோசமான காலகட்டங்கள். இங்கிலாந்துகாரன் இந்தியாவை மொத்தமாக சுரண்டி தூக்கிப் போட்டு போயிருந்தான். ஆகவே, நேருவுக்கு மலர்களின் நடுவே நடந்துவந்து இந்தியாவின் ஆட்சியை அடையும் நற்பேறு கிடைக்கவில்லை. அவர் பசித்த வயிறுகளின் மேலும், வெறித்த விழிகளின் மேலும் நடந்து தான் ஆட்சிமன்றத்தை அடைந்தார். எனவே, முதலாம் ஐந்தாண்டு திட்டத்தின் பெரும் நிதியை உணவு உற்பத்தி மற்றும் அணைக்கட்டுமானங்களுக்காக மட்டுமே அர்ப்பணித்தார், நேரு! ஐந்தாண்டு திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதிபோக, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளிடம் கையேந்தி, இந்திய மக்களை பசியால் வாடாமல் பார்த்துக்கொண்டார், நேரு!
- இந்தியாவுக்கு மட்டுமில்லாமல் உலகுக்காகவும் சிந்தித்த, செயல்பட்டத் தலைவர், நேரு. அவரது, அணிசேராக் கொள்கை உலக வல்லாதிக்க நாடுகளுக்கு எதிராக திரள சிறிய நாடுகளுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. அதே போல, போர்களை எப்போதும் வெறுப்பவராகவே இருந்தார், நேரு. காஷ்மீர் இந்தியா வுடன் இணைந்த தருணத்தில், பாகிஸ்தானுடன் ஒரு போருக்கு நேரு ஆணையிடுவார் என்று இங்கே எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், ‘போர்கள் என்பவை ஊருக்கு வெளியே மைதானத்தில் நடக்கும் பொழுதுபோக்கு விளையாட்டு அல்ல, அவை அப்பாவிகளின் உயிர்களின் மீதும் அவர்களின் உடைமைகளின் மீதும் நடத்தப்படுகின்றன’ என்று மறுத்தார், நேரு. ‘குறைந்தபட்சம் ஒரு சில குண்டுகளையாவது பாகிஸ்தானின் மீது எறியலாம்’ என்று கூட ராணுவதளபதிகள் கேட்டுப்பார்த்தார்கள். ‘எதிரிகள் ஒன்றாக திரண்டிருக்கும் இடம் எதுவென்று கண்டு வாருங்கள். அவர்களை அச்சுறுத்த வேண்டுமானால் பலம்குறைந்த குண்டுகளை வீசலாம்…’ என்று சொன்னார், நேரு. பின்னொரு நாள் ஒரு பேட்டியில், ‘உலகநாடுகள் ஆயுதத்தை முன்னிறுத்தாமல் அன்பை முன்னிறுத்தினால், ராணுவம், போர் என்ற பேச்சுக்கே இடமிருக்காது’ என்று நேரு சொன்னது, ஒட்டுமொத்த உலகத்துக்குமான அசோகப் பற்றாளனின் வார்த்தைகள்!