leader-profile-image

மகாத்மா காந்தி

 • தமிழ்நாடு ‘பெரியார் மண்’, வங்கம் ‘தாகூர் மண்’, குஜராத் ‘படேல் மண்’, கேரளம் ‘நம்பூதிரிபாட் மண்’, மராட்டியம் ‘சிவாஜி மண்’ என ஏகப்பட்ட ‘மண்’கள் இங்கே உண்டு. இவை உண்மையே. ஆனால், ஒட்டுமொத்த இந்தியாவுமே ‘காந்தியின் மண்’! இது அவர் வாங்கிக்கொடுத்த சுதந்திரம். இது அவர் போராடிப் பெற்ற பூமி. இது, அவர் நடந்து அமைத்த நாடு!
 • காந்தி தான் காந்தியம், காந்தியம் தான் காந்தி! காந்தியிடம் இருந்து காந்தியத்தை பிரித்துப் பார்க்கவே முடியாது. சரி, எதெல்லாம் காந்தியம்? அது பலவேர்கள் கொண்ட மரம். அதன் முதல் வேர், ’அதிகாரம் எத்தனை பெரிதாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், அதற்கு அடிபணியாதே…’ என்ற நெஞ்சுரம். அடுத்த வேர், ‘ஆயுதங்கள் மனிதகுலத்துக்கு விரோதமானவை. அழிக்கக் கிளம்பினால் மொத்தமாகவே அனைவரையும் கொல்ல வேண்டி யிருக்கும்’ என்ற புரிதல்! அதற்கும் அடுத்த வேர், ‘மனிதன் உண்மைகளால் ஆனவன். பொய்யும் கயமையும் அவனை மூடியிருக்கும் சிறுதிரைகள் மட்டுமே. அந்தத் திரைகளை கண்டுகொள்ளாமல் எந்த சூழ்நிலையிலும் உண்மையாய் இருக்க முயல்பவனே, மனிதன் என்ற நிலையை அடைகிறான்’ என்ற அனுபவம்! 
 • உண்மையைச் சொன்னால், காந்தி வரும் வரை இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கும் என்று எவருமே நினைக்கவில்லை. சில தேசியவாதிகள் போராடினார்கள். ஆனால், அது ஆங்கிலேய அரசில் சில சலுகைகள் பெறுவதற்கு மட்டுமானதாகவே இருந்தது. காங்கிரஸே, அதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு தான். அதை, சுதந்திரத்திற்காக போராடும் அமைப்பாக மாற்றியவர், காந்தி! கல்கத்தாவில் கலந்துகொண்ட முதல் காங்கிரஸ் கூட்டத்திலேயே, ‘மக்கள் எலலோரும் வெளியே இருக்கையில், இந்த அறைக்குள் அமர்ந்து நீங்கள் என்ன செய்கிறீர்கள்…’ என்றே காந்தி கேட்டார்! அடுத்து, ஒவ்வொரு போராட்டமாக வடிவமைத்து இந்தியாவின் பெரும் மக்கள் திரளை அதில் பங்கெடுக்கவைத்தார், காந்தி. அவருக்குப் பிறகே, இந்தியாவின் பெண்களும் கூட போராட்டக்களத்துக்கு வந்தார்கள். காந்தியின் போராட்டங்களில் உப்பு சத்தியாகிரகம் முக்கியமானது. ஏனென்றால், அதன் மூலம் தான் இந்திய மக்களின் சுயமரியாதை உணர்வை ஆங்கிலேயனுக்கும், ஆங்கிலேயனின் பொருளியல் சுரண்டலின் கோரத்தை இந்திய மக்களுக்கும் காட்டினார், காந்தி! இன்றும் மளிகைக்கடைகளில் உப்பை வெளியே வைக்கிறார்கள் அல்லவா, அது உப்பு சத்தியாகிரகத்தின் போது காந்திக்கு ஆதரவளிக்கவேண்டும் என்று அன்றைய இந்திய மக்கள் ஆரம்பித்த செயலே. அது இன்றும் நீடிக்கிறது!
 • ஊரே காந்தியை ‘மகாத்மா’ என்றழைத்தது. ஆனால், எங்கும் எப்போதும் ‘மகாத்மா’ என்ற சிறப்புப்பெயரை ஏற்றதில்லை, காந்தி. நிறைய கூட்டங்களில் அவரைப் பார்த்து, ‘நீங்கள் மகாத்வாமே… என்னென்ன வித்தைகள் செய்வீர்கள்…’ என்று கேட்பார்கள். காந்தி சிரிப்பார். ‘நான் மனிதன். இங்கே பார்… இப்படி கிள்ளினால் எனக்கும் வலிக்கும், இப்படி அடித்தால் எனக்கும் காயம்படும்’ என்று சொல்வார், காந்தி! அவரது எளிமையும் கூட அவரே வேண்டுமென்று உருவாக்கிக் கொண்டதல்ல. தென்னாப்பிரிக்காவில் இருந்தவரை அவருமே கோட்சூட் என்று திரிந்தவர் தான். ஆனால், ‘நான் எளிய மக்களுக்காக போராட வந்திருக்கிறேன். அவர்களில் ஒருவனாக இருந்தால் மட்டுமே அவர்கள் என்னை ஏற்பார்கள்’ என்று முடிவெடுத்து, அரையாடைக்கு மாறினார், காந்தி. அதுமட்டுமல்லாமல், அன்று இந்தியாவை ஆங்கிலேயன் ஆளவில்லை, அவன் பெயரில் சமஸ்தான மஹாராஜாக்கள் தான் ஆண்டு கொண்டிருந்தார்கள். ஆங்கிலேயன் கப்பத்தை வசூலிக்கும் பணியை மட்டுமே செய்து கொண்டிருந்தான். காந்தியின் அரையாடை, முக்கியமாக அந்த மஹாராஜா தோரணையை மக்களின் மனதில் ஒன்றுமில்லாமல் ஆக்கியது! இருந்தும் காந்தியின் எளிமையை பலர் விமர்சித்தார்கள். அவர், மூன்றாம் வகுப்பு ரயிலில் பயணம் செய்ததைக் கூட குறிப்பிட்டு வசை பாடினார்கள். அதற்கு, ‘அவர் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்ததால் தான், இந்தியா எழுந்து நடக்க ஆரம்பித்தது…’ என்று பதில் சொன்னார்கள், மக்கள்!
 • காந்தியின் பொருளியல் கொள்கைகள், ஒரு அசட்டுக்கிழவனின் நிறைவேறாக் கனவு என்று தோன்றலாம். காந்தி, அசட்டுக்கிழவன் தான். அதில் சந்தேகமில்லை. ஆனால், அவரது கனவு நிறைவேறாக் கனவு இல்லை. இன்று இங்கே என்ன நடக்கிறது? பெருநகரங்களை உருவாக்கினோம். அங்கே இடம்போதாமல் அடுத்த சிறுநகரங்களை உருவாக்கினோம். அங்கேயும் இப்போது இடம் போதவில்லை. இப்படியே போய், கடைசியில் காந்தி சொன்ன கிராமங்கள் மேம்பாட்டில் தான் நாம் நிற்போம். அதே போல காந்தி முற்றிலும் நவீனத்துக்கும் வளர்ச்சிக்கும் எதிரானவரும் இல்லை. ‘உலகத்திலேயே சிறந்த கண்டுபிடிப்பு இந்த சிங்கர் தையல் மெஷின்’ என்று சொன்னவர், அவர். பெரும்பாலும் ரயில் பயணங்களையே அவர் தேர்ந்தெடுத்தார். அவர் கண்களில் எப்போதும் கண்ணாடி இருந்தது. ஆனால், ‘இயந்திரங்கள் உயிரற்றவை. அதை உயிருள்ளவன் எப்படி வேண்டுமானாலும் உபயோகிக்க முடியும்’ என்று மட்டுமே காந்தி அச்சப்பட்டார். இன்று ‘அய்யோ… மன அழுத்தம் அதிகரித்துவிட்டது…’ என்று, சாமியார்களை நாடுபவனெல்லாம் யார்? எல்லாம், இயந்திரங்களின் பிடியில் இருப்பவன். 
 • காந்தியின் ராட்டை வெறும் எளிமைக்கான சின்னம் அல்ல. அதன் பின்னால் ஒரு மிகப்பெரிய சமூக நகர்வு இருந்தது. அன்று இந்தியாவில் உடல் உழைப்பு என்பது எளிய மக்களுக்கு மட்டுமானதாகவே இருந்தது. துணியை உருவாக்குவது முதல், அதை வெளுத்து காயவைத்து மடித்து நீட்டும் வரை அத்தனையும் எளியவனே செய்து கொண்டிருந்தான். ஆனால், காந்தியின் ராட்டை இயக்கம் உடல் உழைப்பை எல்லோருக்குமானதாக மாற்றியது. அடுத்து, அது தான் அன்றைய பெண்களின் ஒரே பொருளியல் ஆதாயம். இப்போதும் கிராமங்களில் இருக்கும் யாரேனும் ஒரு பாட்டியை கேட்டுப் பாருங்கள். ராட்டை சுற்றி காசுசேர்த்து பொருட்கள் வாங்கிய கதையை, கண்கள் விரிய அவர் சொல்வார்!
 • காந்தியின் சமூகப்பார்வைகள் மீது இன்று நிறையவே விமர்சனங்கள் உண்டு. ஆனால், காந்தியின் ஒவ்வொரு கூறும் இந்தியாவின் கூறு என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். நீங்கள் காந்தியிடம் பார்க்கும் பிரச்சனைகள் எல்லாமே, இந்தியாவின் பிரச்சனைகள். ஆக, அவர் மீது நாம் சுமத்தும் ஒவ்வொரு பழியும் இந்தியாவின் மீது சுமத்தப்படும் பழிகளே. இந்தியாவின் பிரச்சனை வர்ணாசிரமத்தை பற்றிய புரிதலின்மையா, காந்தியின் பிரச்சனையும் அதே தான். இந்தியாவின் பிரச்சனை சாதி மீது அனுதாபப் பார்வையா, காந்தியின் பிரச்சனையும் அதே தான். ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் எல்லாவற்றையும் கற்று தெளிந்து, படிப்பினைகள் பெற்று காந்தி வெளியே வந்தார். ஆனால், இந்தியா வெளியேவர விரும்பவில்லை. மாறாக, மார்பில் மூன்று குண்டுகளுடன் அவரை வழியனுப்பி வைத்தது!
 • காந்தியைப் பற்றி பரப்பப்படும் எல்லா அவதூறுகளுமே, அவரது ஆரம்பகால கருத்துக்களை மட்டும் எடுத்து செய்யப்படுபவையே. சரி, நம்மில் யார் தான் பிறக்கும்போதே முற்போக்காக பிறந்தோம்? சாதி ஒழிப்பைப் பற்றி நமக்கு எந்த வயதில் தெரிந்தது? பெண்ணுரிமைப் பற்றி நமக்கு எந்த வயதில் புரிந்தது? எல்லாம், காலத்தின் போக்கில் நாம் கற்றுக்கொண்டதும் பெற்றுக்கொண்டதும் தானே. காந்தியும் அதையே தான் செய்தார். 1940களுக்கு பிறகான காந்தியை நீங்கள் அவ்வளவாக வரலாற்றுக்குறிப்புகளில் படிக்கமுடியாது. ஏனென்றால், அப்போதைய காந்தி இந்திய சமூகத்தையே புரட்டிப்போட்டு விடவேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்த, மிகப்பெரிய முற்போக்காளர். ‘கலப்பு மணங்களையே இனி நான் ஆதரிப்பேன். என் ஆசி உங்களுக்கு வேண்டும் என்றால், மணமக்களில் ஒருவர் கட்டாயம் ஒடுக்கப்படுவோராக இருக்கவேண்டும்…’ என்று, காந்தி அறிவித்தது 1940களுக்கு பிறகே. அம்பேத்கர் பயங்கரமான காங்கிரஸ் எதிர்ப்பாளர். அவருக்கு ஆதரவாக அப்போது காங்கிரஸில் எவருமே இருக்கவில்லை. 1947ம் ஆண்டு அமைச்சரவை பட்டியலை ஒரு தூதனிடம் அளித்து நவகாளிக்கு அனுப்பினார், நேரு. அதைப் பிரித்துக்கூட பார்க்காமல், ‘அம்பேத்கர் பெயரையும் இதில் சேருங்கள்…’ என்று குறிப்பெழுதினார், காந்தி. ஏனென்றால், ‘இந்த எழுபது வயது கிழவனை தவிர மாமேதை அம்பேத்கரை காங்கிரஸ் கட்சியில் யாரும் ஆதரிக்க மாட்டார்கள்’ என்பது காந்திக்கு நன்றாகவே தெரியும். காந்தியின் ஆணை வந்தபின்பு நேருவுக்கு வேறு எண்ணமே இருக்கப்போவதில்லை. ஆகவே, வாழ்வெல்லாம் காங்கிரஸை எதிர்த்த அம்பேத்கர், அதே காங்கிரஸின் ஆதரவுடன் இந்தியாவின் சட்ட அமைச்சர் ஆனார்.
 • காந்தி பூனா ஒப்பந்தத்தை நிறைவேறவிடாமல் தடுத்தார் என்று இன்னொரு பழி உண்டு. ஆனால், உண்மையில் காந்தியே பூனா ஒப்பந்தத்தை நிறைவேற்றும் நிலைக்கு கொண்டு சென்றார். அவர் எதிர்த்தது ஒடுக்கப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அல்ல, அவர்களுக்கான இரட்டை வாக்குரிமையை மட்டுமே. யோசித்துப் பாருங்கள். ஒடுக்கப்பட்டோருக்கு இரட்டை வாக்குரிமை கொடுக்கப்பட்டிருந்தால், கண்டிப்பாக அவர்கள் இந்தியாவுக்குள் ஒரு தனித்தீவாக மாறியிருப்பார்கள் என்பதே உண்மை. அதுவும் இல்லாமல், ‘இந்தியாவை 400 ஆண்டுகள் ஒட்டச்சுரண்டிய ஆங்கிலேயன், என்ன திடீரென்று ஒடுக்கப்பட்டோருக்கு உரிமைகள் அளிக்கிறேன் என்று கிளம்புகிறான்…’ என்ற சந்தேகமும் காந்தியை சிந்திக்க வைத்தது. ஏற்கனவே, இஸ்லாமியர்கள் மற்றும் சீக்கியர்களுக்கு 1920ம் ஆண்டு வாக்கில் இரட்டை வாக்குரிமை அளித்து, இந்தியாவை வெற்றிகரமாக பிளவுபடுத்தியிருந்தார்கள், ஆங்கிலேயர்கள். காந்தி பூனா ஒப்பந்தத்தின் போது அல்ல, எப்போதுமே ஆங்கிலேயனின் கரிசனத்தை ஐயத்துடனேயே பார்த்தார். அதன் விளைவே, பூனா ஒப்பந்தத்தின் இரட்டை வாக்குரிமை பிரிவை அவர் எதிர்த்தது. ஆனால், காந்தியின் தலையீட்டாலேயே பூனா ஒப்பந்தத்தில் ஒடுக்கப்பட்டோருக்கான தனித்தொகுதிகள் 148 ஆக உயர்ந்தன. அம்பேத்கரே எரவாடா சிறையில் காந்தியை சந்தித்த பின்பு, ‘அவர் என்னை காத்திருக்கிறார்…’ என்றே சொன்னார்!
 • ‘எரியும் அடுப்பில் வைத்த சோற்றுப்பானையைப் போல எப்போதும் கொதித்துக்கொண்டே இருக்கும் நிலம், இந்தியா’ என்றொரு சொல் உண்டு. ஆம்! இந்தியாவில் எந்த நிமிடமும் ரத்த ஆறு உருவாவதற்கான காரணங்கள் இருக்கின்றன. அது மதமோதல்களின் வழி நடக்கலாம்; மொழிமோதல்களின் வழி நடக்கலாம்; இனமோதல்களின் வழி நடக்கலாம். ஆனால், அப்படி நடக்காமல் தடுத்துக்கொண்டிருக்கும் அரணை காந்தியே அமைத்தார். மதம், மொழி, இனம் என எல்லாவற்றையும் கடந்து, இந்திய மக்களை ஒன்றிணைத்தார் காந்தி. அதற்கு அவருக்கு முப்பது ஆண்டுகளுக்கும் மேல் தேவைப்பட்டன. அன்பையும், சகிப்புத்தன்மையையும், சகோதரத்துவத்தையும் இந்திய மக்களின் மனதில் பதித்து, ரத்த ஆறுகளை கட்டுப்படுத்தினார் காந்தி. அதே நேரம், அவர் ‘தேசமே எல்லாம்’ என்றும் சொல்லவில்லை. அவர் காலத்து அரசியல் தலைவர்கள் கடந்தகாலத்தில் இருந்து தேசியங்களை உருவாக்கிக் கொண்டிருக்கையில், காந்தி மட்டுமே ஒரு பன்மைத்துவ அடையாளம் கொண்ட எதிர்கால தேசியத்தை உருவாக்கி, இந்திய மக்களை திரட்டினார். மறக்க வேண்டாம்… ஒட்டுமொத்த இந்தியாவும் பாகிஸ்தானுக்கு எதிராக திரண்டு தேசப்பற்று வெறியோடு சுற்றிக்கொண்டிருக்கையில், காந்தி மட்டுமே ‘அவர்களுக்கு நாம் அளிக்க வேண்டிய நிதியை அளியுங்கள். அதுவே அறம். மட்டுமல்லாமல், நேற்றுவரை அவர்களும் இந்நாட்டவர்களே…’ என்று சொன்னார்!
 • அதிகாரத்துக்கு எதிராக மக்களை எப்படி திரட்டவேண்டும், அப்படி திரட்டிய மக்களை எப்படி பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கெல்லாம், காந்தியிடமே பாடங்கள் இருக்கின்றன. செளரி செளரா சம்பவத்தை எல்லோருமே வரலாற்றுப்புத்தகங்களில் படிக்க முடியும். அப்போது, போராட்டக்காரர்கள் காவல்நிலையத்தை கொளுத்தியதில், 20 போலிஸார் கொல்லப்பட்டார்கள். அப்போது நாடு முழுவதுமே ஒருவித வெறி நிலவியது. காந்தி நினைத்திருந்தால், அதை ஊதிப்பெருக்கி ஆயிக்கணக்கான ஆங்கிலேயர்களின் உயிர்களையும் , பல்லாயிரக்கணக்கான இந்திய மக்களின் உயிர்களையும் இழந்து, சுதந்திரத்தை நோக்கி சென்றிருக்க முடியும். ஆனால், காந்தி ‘இந்தப் போராட்டம் இப்போதே நிற்கட்டும்…’ என்று ஆணையிட்டார். போராட்டம் நின்றது. ஆனால், வெறி அடங்கவில்லை. பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள், ‘இது தான் தருணம். ஆங்கிலேயனை நம்மால் விரட்ட முடியும்…’ என்று சொன்னார்கள். மோதிலால் நேருவும், சித்தரஞ்சன் தாஸூம் காங்கிரஸூக்குள்ளேயே தனி அமைப்பு தொடங்கினார்கள். ஆனாலும், ‘எத்தனைக் காலமானாலும் சரி. அஹிம்சை முறையிலேயே இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் இருக்கும். ஏனென்றால், ரத்தத்தில் கிடைக்கும் எதுவும் ரத்தத்திலேயே முடியும்…’ என்று உறுதியாக நின்றார், காந்தி!
 • உலகத்தின் கண்களுக்கு அணுவளவும் அஞ்சாத ஒரு மகத்தான தலைவனால் மட்டுமே, ‘என் வாழ்க்கையே என் செய்தி…’ என்ற சொற்றொடரை எடுக்க முடியும். ஆம், காந்தியின் வாழ்க்கையே காந்தியின் செய்தி. அதில் நீங்கள் சிலவற்றை மட்டும் எடுத்து அவரை விமர்சிக்கலாம், பலவற்றை எடுத்து அவரை போற்றலாம், இல்லையா, எதையுமே எடுத்துக்கொள்ளாமல் அவரை முற்றாகவே மறந்தும் இருக்கலாம். ஆனால், காந்தி அதே முக்கியத்துவத்துடன் எப்போதும் இருப்பார்!