காமராஜர்
- எளிமையும், நேர்மையும், தியாகமும் கொண்டு தமிழ்நிலத்தைக் காக்க அவதாரமென எழுந்த மக்கள் தலைவர், கர்மவீரர் காமராஜர்! அவர் இறந்தபோது, சட்டைப்பையில் 100 ரூபாய்க்கும் குறைவாகவே வைத்திருந்ததாக சொல்வார்கள். ஆனால், அவர் தமிழகத்தின் ஆட்சியை விட்டு இறங்கியபோது, அரசுக் கருவூலத்தில் ஆயிரமாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வைத்துவிட்டு போனார்!
- தமிழகத்தை பின்னாளில் ஆட்சி செய்த , அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய நான்கு பெரும் முதலமைச்சர்களுக்கும், முன்னோடியாக திகழ்ந்த பெருமைக்குரியவர், காமராஜர். அண்ணாவிடம் காமராஜரின் தியாகத்தைப் பார்க்கலாம்; கலைஞரிடம் காமராஜரின் நடைமுறைப் பார்வையை பார்க்கலாம்; எம்.ஜி.ஆரிடம் காமராஜரின் மக்கள் அணுகுமுறையைப் பார்க்கலாம்; ஜெயலலிதாவிடம் காமராஜரின் பயமறியா துணிச்சலைப் பார்க்கலாம்! நான்கு பேரும் நடைமுறைப்படுத்திய மக்கள் நலத்திட்டங்களில், காமராஜரை மொத்தமாகவே பார்க்கலாம்!
- அண்ணாவுக்கும் பெரியாருக்கும் இருந்தது, குரு- சீடன் உறவு. ஆனால், காமராஜருக்கும் பெரியாருக்கும் இடையே இருந்தது தந்தை – மகன் உறவு! அரசியலின் ஆரம்பகாலம் முதலே காமராஜரை காத்து நின்றிருக்கிறார், பெரியார். காமராஜரை 1954 இடைத்தேர்தலின் போது, குடியாத்தத்தில் நிற்க வைத்தவரும் கூட பெரியார் தான். ஆனால், காமராஜர் முதலில் தயங்குகிறார். ‘இந்த தொகுதி மக்களுக்கு நான் அவ்வளவாக அறிமுகமே இல்லாதவன். என்னால் எப்படி வெல்ல முடியும்’ என்று கேட்கிறார். ஆனால், பெரியார் ‘நீ நில்லு கண்ணு… நான் ஜெயிக்க வைக்குறேன்…’ என்று உறுதியாக சொல்கிறார். பின்னர், அதுவே நடந்தது! காமராஜரின் வெற்றிக்காக, குடியாத்தத்தின் தெருக்களில் இறங்கி பிரச்சாரம் செய்தார், பெரியார். ஒவ்வொரு மேடையிலும், ‘இதோ கம்பீரமாய் வந்து நிற்கிறான் பச்சைத்தமிழன் காமராஜ்… அவனுக்கு உங்கள் வாக்கை அளியுங்கள்…’ என்று முழங்கினார். அன்று, திமுக தேர்தல் அரசியலில் இறங்காத இளம் கட்சியாக இருந்தது. என்றாலும், களத்தில் தாக்கம் செலுத்தும் அளவுக்கு அவர்களுக்கு வலிமை இருந்தது. ஆனால், ‘பெரியாரின் ஆணை பெருமானின் ஆணை’ என்று நின்ற அண்ணா, குடியாத்தத்தில் காமராஜரை ஆதரிப்பதாக அறிவித்தார். ஆக, அந்தத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மட்டுமே காமராஜருக்கு எதிராக நின்றார்கள். தேர்தல் முடிவில், கம்யூனிஸ்ட் வேட்பாளர் கோதண்டராமனை மிகப்பெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்று பெரியாருக்கு பெருமை சேர்த்தார், காமராஜர்! அவர் வாங்கிய முதல் ஆசியும் கூட பின்னர் பெரியாரிடம் தான்!
- பொதுவாக, ‘தமிழ்நாட்டின் கல்விக்கண்களை காமராஜர் திறந்தார்’ என்று சொல்வார்கள். ஆனால், காமரஜார் தமிழ்நாட்டின் கல்விக்கண்களை திறக்கவில்லை. மாறாக, அந்தக் கண்களையே தமிழ்நாட்டுக்கு அவர் தான் அளித்தார்! ஆட்சிசெய்த 9 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும், 18,000 பள்ளிகளை திறந்து அசத்தினார், காமராஜர். அப்போதெல்லாம், தினந்தோறும் கல்வி தொடர்பாக ஒரு புதிய நடவடிக்கையை எடுத்தது, காமராஜரின் அமைச்சரவை. ஆகையால் தான், காமராஜருக்கு முன்னால் 7 சதவிகிதமாக இருந்த தமிழகத்தில் கல்வி விகிதம், காமராஜருக்கு பின்னால் 38 சதவிகிதமாக உயர்ந்து நின்றது. முக்கியமாக, நீதிக்கட்சியால் சென்னையின் மாநகராட்சி பள்ளிகளில மட்டும் அறிமுகப்படுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டத்தை, தமிழகமெங்கும் விரிவுப்படுத்தினார் காமராஜர். அதற்கு செலவழிக்க நிதியில்லை என்று அமைச்சர்கள் சொன்னபோது, ‘பசியோட இருந்தா எப்படி பசங்களுக்கு படிப்பு ஏறும்னேன்… தமிழ்நாட்டையே வித்தாவது பசங்க தட்டை நாம நிறைக்கணும்னேன்…’ என்று திடமாக அறிவித்தார், காமராஜர்! பெரும்பாலும், மத்திய அரசு நிதி மற்றும் நன்கொடையாக கிடைத்த நிதி ஆகியவற்றை வைத்து, மதிய உணவு திட்டத்தை வெற்றிகரமாக நடத்திச் சென்றார், அவர். உணவுக்கு அடுத்து, ‘நம் பிள்ளைகளுக்கு நல்ல உடை தேவை’ என்று முடிவெடுத்து, இலவச சீருடை திட்டத்தையும், காமராஜர் அமல்படுத்தினார்!
- ஒருவிதத்தில், காமராஜரை காங்கிரஸ் கட்சியில் இருந்த திராவிடப்பற்றாளர் எனலாம். ஆம், அவர் கடைசிவரை தேசப்பற்றில் ஊறியவராகவே இருந்தார். ஆனாலும், ஒடுக்கப்படும் எளியமக்களுக்காக அவர் சிந்தித்தார். ‘டாக்டருக்கு படிச்ச தாழ்த்தப்பட்டவன் ஊசிபோட்டு எந்த நோயாளி செத்தான்னேன்? பிற்படுத்தப்பட்ட எஞ்சினியர் கட்டுன எந்தப் பாலம் இடிஞ்சுப்போச்சுன்னேன்? யாருக்கு வாய்ப்பு கொடுத்தாலும், எஞ்சினியரும் ஆகலாம், டாக்டரும் ஆகலாம்னேன்…’ என்று பேசியது, அண்ணா அல்ல, கலைஞர் அல்ல, காமராஜர்! ‘இங்கே இருக்கும் எல்லா மக்களும் மதத்துக்காகவோ, சாதிக்காகவோ அடிச்சுக்காம ஒண்ணுமண்ணா இருக்கணும்…’ என்று எப்போதும் நினைப்பவராக இருந்தார், காமராஜர்!
- இந்தியா கண்டதிலேயே மிகப்பெரிய காந்தியவாதி வடக்கே நேரு என்றால், தெற்கே காமராஜர்! உள்ளும் புறமும் மொத்தமாக காந்தியின் உருவமென வலம் வந்தார், காமராஜர்! 1963ம் ஆண்டு அவர் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியின் நிர்மாணப் பணிக்கு செல்ல முடிவெடுத்தது கூட, காந்தி ஜெயந்தி தினத்தன்று தான். நேருவுக்குப் பிறகு, இரண்டாம் நேருவாக இரண்டுபேரையே காங்கிரஸ் தொண்டர்கள் பார்த்தார்கள். ஒருவர், ஜெயப்பிரகாஷ் நாராயண், இன்னொருவர் நம் காமராஜர். ஆனால், பிரதமராகும் வாய்ப்பை மிக எளிதாக வேண்டாம் என்று சொல்லிவிட்டு, லால் பகதூர் சாஸ்திரியை பிரதமராக மாற்றினார், காமராஜர். காந்தியின் இடத்தில் நின்று அவர் செய்த செயல் அது. பின்னர், 1969ம் ஆண்டு காங்கிரஸ் உடைந்து இந்திரா காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ் என்ற இருபிரிவுகள் ஏற்பட்டன. அதில், ஸ்தாபன காங்கிரஸூக்கு காமராஜரே மையம். அப்போது, ஸ்தாபன காங்கிரஸூக்கு, காங்கிர தொண்டர்களால் வழங்கப்பட்ட இன்னொரு பெயர் என்ன தெரியுமா? அது, ‘காந்தி காங்கிரஸ்’!
- 12 பிரதமர்களை மேய்த்த பிரதமர் நேரு என்றால், 8 முதலமைச்சர்களை மேய்த்த முதலமைச்சர் காமராஜர்! அதாவது, அவரது அமைச்சரவையில் இருந்த சி. சுப்பிரமணியம், பக்தவத்சலம் என எல்லோரும், தனித்தனியாக முதலமைச்சராவதற்கு உண்டான தகுதியுடன் இருந்தனர். ஆனால், நேருவைப்போலவே காமராஜரிடம் இருந்த மக்கள் செல்வாக்கும், தேசநேசமும் அவரை தனித்து ஒளிரவைத்தது. ஒருவிதத்தில், காமராஜர் தென்னகத்தின் கர்ணன்! கறுப்பு நிறத்தில், வெள்ளை உடையில் அவர் சட்டமன்ற வளாகத்தில் வந்து நிற்கையில், பெரும்புகழ் அங்கத்தின் அவையில் வெண்கொற்ற குடை சூழ கர்ணன் வந்துநிற்பதைப் போலவே இருக்கும்! வேண்டுமானால், நேருவுடன் காமராஜர் அமர்ந்திருக்கும் புகைப்படங்களை எடுத்துப் பாருங்கள். துரியோதனனின் வலப்பக்க சிம்மாசனத்தில் காலை சற்றே சரித்து பின்னால் நன்றாக சாய்ந்து அமர்ந்திருக்கும் கர்ணனைப் போலவே இருப்பார், காமராஜர்!
- காமராஜர் தமிழ்மொழி மீது மட்டும் தனியாக பற்று காட்டியவர் இல்லை. ஏனெனில், இந்தியாவின் அத்தனை மொழிகளுமே அவருக்கு முக்கியமானது தான். ஆனாலும், தமிழுக்காக அவர் ஆற்றியவை நிறைய! முதலில், பள்ளிகள் மற்றும் உயர்கல்வி சாலைகளில் தமிழை பயிற்றுமொழியாக மாற்றினார், காமராஜர். அடுத்து, பிறமொழி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பாடங்களை எளிய தமிழில் மொழியாக்கம் செய்து மாணவர்களிடம் கொண்டுசேர்த்தார், அவர். அரசாங்க அலுவலகங்களில் தமிழ் தட்டச்சு இயந்திரங்களும் கூட காமராஜர் ஆட்சிக்காலத்திலேயே கட்டாயம் ஆக்கப்பட்டன! அவ்வளவு ஏன்? காமராஜர் இருக்கும் வரை, இந்தித் திணிப்பு நடவடிக்கை தமிழகத்திற்குள் நுழையமுடியவில்லை என்பதே, வரலாறு படிக்கும் அனைவரும் சொல்லும் உண்மை!
- தமிழகத்தின் விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கான ஆணிவேரை காமராஜர் தான் ஊன்றினார்! வைகை அணை, மணிமுத்தாறு அணை, கீழ்பவானி அணை, பரம்பிக்குளம் அணை, சாத்தனூர் அணை என, தமிழ்நாட்டு விவசாயிகளுக்காக நிறைய அணைக்கட்டுமானங்களை ஏற்படுத்தினார், காமராஜர். நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம், சென்னை – ஆவடி ராணுவத் தளவாட தொழிற்சாலை என, தொழில்துறையிலும் நின்று விளையாடியது கறுப்பு ராஜனின் சிவப்பு செங்கோல்!
- காமராஜர், மிகச்சிறந்த பேச்சாளர் இல்லை. அடுக்குமொழியில் கடிதங்களோ, கட்டுரைகளோ தீட்டியவரும் இல்லை. ஆனாலும், அவருக்குப் பின்னால் மிகப்பெரிய மக்கள் திரள் ஆதரவாக நின்றது! தேடிப்பாருங்கள். மற்ற தலைவர்களுக்கு கிடைப்பதைப் போல, காமராஜருக்கு மட்டும் பெரியளவில் மேற்கோள்கள் (Quotes) கிடைக்காது. சட்டசபையில் கூட, ‘ஆம், இல்லை, செய்வோம், ஆலோசிப்போம்…’ என்று ஓரிரு வார்த்தைகளிலேயே பதில் சொல்லியிருக்கிறார், காமராஜர். ஆட்சிசெய்த 9 ஆண்டுகளில், மொத்தமாக 6 நீண்ட உரைகளையே காமராஜர் சட்டமன்றத்தில் ஆற்றியிருக்கிறார். ‘காற்றுமழையை கூட கணித்துவிடலாம். ஆனால், காமராஜரை கணிக்கமுடியாது’ என்பதே அன்று சட்டமன்ற வளாகத்தில் காமராஜரைப் பற்றிய பலரின் மனப்பதிவு. இவ்வளவு இருந்தும், இன்றும் ஜூலை 15ம் தேதி வரும்போது ‘மலர்களின் நடுவிலே ஒரு ரோஜா… மக்களின் மத்தியிலே காமராஜா…’ என்று, தமிழ்நாட்டின் கடைக்கோடியில் பாட்டிசைக்கிறார்கள், பாமர மக்கள்!
- ‘உடம்புக்கு தான் சட்டை, சட்டைக்காக உடம்பு இல்ல’ என்ற கொள்கையில் நம்பிக்கை கொண்டவர், காமராஜர். அதாவது, மக்களுக்காக தான் சட்டம், சட்டத்துக்காக மக்கள் இல்லை என்பார். காமராஜரின் ஆட்சிக்காலத்தில், சட்டநடைமுறைகளை காரணம் காட்டி, எந்த திட்டமும் தாமதமானதில்லை. ஒரு சம்பவம் சொல்வார்கள். அப்போது, பரம்பிக்குளம் – ஆழியாறு அணை தண்ணீர் தாக்கீது ஓடிக்கொண்டிருந்தது. தமிழ்நாடு, கேரளா என இரண்டு மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகளும் ஆண்டுக்கணக்காக பேசிக்கொண்டிருந்தார்கள். காமராஜர் அதைக் கவனிக்கிறார். ‘இவனுவ வுட்டா 58 வருசமும் பேசுவானுவ… ஃபோன போடு நம்பூதிரி பாட்டுக்கு…’ என்று உதவியாளரை அழைக்கிறார். நம்பூதிரிபாட் லைனில் வருகிறார். காமராஜர் வழக்கமான அதட்டும் தொனியில், ‘நீ நான் எல்லாமே தேசத்துக்காக தான் பணி செய்றோம். உன் மாநிலம், என் மாநிலம்னு பிரிச்சுப் பாக்காத. நீ எனக்கு தண்ணி தந்தா, நான் உனக்கு கரண்ட் தர மாட்டேனா…’ என்று விளாசி எடுக்கிறார். அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர அனுமதிக்கும் கையெழுத்திட்ட கோப்புகளை காமராஜருக்கு அனுப்பி வைத்தாராம், நம்பூதிரிபாட்!
- ‘காமராஜர் ஆட்சி’ என்ற சொல் தமிழ்நாட்டில் வெகுபிரசித்தம். ஆனால், காமராஜரின் ஆட்சி என்பது வெறுமனே நிர்வாகமுறையானது அல்ல, அது தனிவாழ்வில் நேர்மையும், எளிமையும், மக்கள் மீதான அன்பும், கரிசனமும் கொண்டது. கூடவே, மிகவும் பின்தங்கிய சமூகப்பின்னணியில் இருந்து வந்து பல கோடி மக்கள் கொண்ட ஒரு பெருநிலத்தை ஆளும் வசீகரத்தையும் கொண்டது! அப்படியொரு எளிமையாளன் மற்றும் நேர்மையாளன், பின்தங்கிய சமூகத்தில் இருந்து வந்து தமிழ்நாட்டை ஆட்சிசெலுத்துகையில், எவருமே எடுத்துச்சொல்லாமல் இங்கே நடப்பது ‘காமராஜர் ஆட்சி’ என்று அகிலம் அழைக்கும்!