leader-profile-image

தீபிகா பல்லிக்கல்

  • இந்தியாவின் ஸ்குவாஷ் விளையாட்டின் அறிவிக்கப்படாத ‘அம்பாஸிடர்’ தீபிகா பல்லிக்கல்! 2011ம் ஆண்டு அவர் ஸ்குவாஷ் அரங்கில் அடியெடுத்து வைத்த பிறகு தான், அப்படியொரு விளையாட்டு இருக்கிறது என்பதையே நம்மில் பலர் அறிந்துகொண்டார்கள்.
  • தீபிகா பல்லிக்கல் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவர். அவரது அம்மா சுஷான் பல்லிக்கல் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை. எனவே, பொருளாதார ரீதியாக தீபிகாவுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால், மக்களிடம் அறிமுகமில்லாத விளையாட்டை மேம்படுத்த வேண்டிய ஒரு கடமை அவருக்கு இருந்தது. ஸ்குவாஷில் பெருவெற்றிகள் போதும் அதை ஒரு பொருட்டாகக் கருதாத ஊடகங்களுடனும் அவர் தொடர்ந்து போராடினார்.
  • ஸ்குவாஷ் விளையாட்டில் ஆண்கள் ஆதிக்கத்துக்கு எதிராக போர்க்குரல் கொடுத்தவர், தீபிகா. தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண் வீரர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையில், வெறும் 40% மட்டுமே பெண் வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்டது. இதைக் கடுமையாக எதிர்த்தார் தீபிகா. இதற்காக 2012ம் ஆண்டு முதல் 2015 வரை அனைத்து தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளையும் அவர் புறக்கணித்தார். கடைசியில், 2016ம் ஆண்டு ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் பரிசுத்தொகை வழங்க சம்மதித்தது இந்திய ஸ்குவாஷ் சம்மேளனம்.
  • இந்தியாவில் ஸ்குவாஷ் விளையாட்டின் எதிர்காலம் குறித்தும் அதிகம் கவலைப்படுபவர், தீபிகா. ‘இப்போது என்னையும் ஜோஸ்னாவையும் தவிர அடுத்தக்கட்ட ஸ்குவாஷ் நட்சத்திரங்கள் யாருமே இங்கு இல்லை. நானும் அவரும் இன்னும் 4 அல்லது 5 வருடங்கள் ஆடுவோம். அதற்குள் இன்னும் நிறைய தீபிகாக்களையும் ஜோஸ்னாக்களையும் நாம் உருவா க்கவேண்டும்’ என்று அவர் அளித்த பேட்டி மிகவும் முக்கியமானது.
  • தீபிகாவும் ஜோஸ்னாவும் இந்திய ஸ்குவாஷின் அசைக்கமுடியாத ஜோடி. இருவரும் இணைந்து 2014ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார்கள். ஸ்குவாஷில் நமக்குக் கிடைத்த உயரிய வெற்றி அது!
  • இந்தியாவில் பிரபலமில்லை என்றாலும் ஸ்குவாஷ் விளையாட்டை உலகம் முழுக்க 2 கோடி பேர் விளையாடுகிறார்கள். அதன் தரவரிசையும் மதிப்புமிக்க ஒன்று. அதில், முதல் 10 இடத்துக்குள் முன்னேறி சாதனை படைத்திருக்கிறார், தீபிகா. அவருக்கு முன்னும் சரி பின்னும் சரி, யாரும் அந்த சாதனையை செய்யவில்லை.
  • 2012ம் ஆண்டு தீபிகா பல்லிக்கல் அர்ஜூனா விருதை அடைந்தார். 2014ம் ஆண்டு அவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருதும் வழங்கப்பட்டது!