ஜி.டி. நாயுடு
- உலகில் சிலபேரின் வரலாற்றைப் படித்தால் மட்டுமே, ‘இப்படியொருவர் எப்படி சாத்தியம்…’ என்ற கேள்வி நமக்குள் எழும். அப்படியொரு கேள்வியை நமக்குள் எழுப்புபவர், ஜி.டி. நாயுடு எனும் கோபாலசாமி துரைசாமி நாயுடு!
- ‘மீனாட்சி கோயில் இருப்பது மதுரை’ என்பது போலத்தான், ‘ஜி.டி. நாயுடு பிறந்த இடம் கோயம்புத்தூர்’ என்பதும். இருந்தாலும், ஒரு பதிவுக்காக மீண்டும் சொல்கிறோம்… 1893ம் ஆண்டு, கோயம்புத்தூரில் பிறந்தார், ஜி.டி நாயுடு. அவரது அப்பா விவசாயி. எனவே, எல்லா விவசாயிகளையும் போல அவரும், மகனை அதிகமாக படிக்கவைக்க எண்ணினார். ஆனால், ஜிடி நாயுடுவுக்கு எழுத்துக்கள் எல்லாமே வட்டங்களை வெவ்வேறு வகைகளில் ஒட்டவைத்த ஒரு வித்தியாச வடிவமாகவே தெரிந்தன. அவர் சிறகுகளைத் தேடினார். அந்தச் சிறகுகளை கொண்டு வட்டமடிக்க வானங்களை தேடினார். அது எதுவுமே, பத்துக்கு இருபது என்று அளவெடுத்து கட்டப்பட்ட கல்விக்கூட கட்டிடங்களில் கிடைக்கவில்லை. ஆகவே, ஆரம்பக்கல்வியோடு கல்விப்படிப்பை நிறுத்தினார். அடுத்து, சிலகாலம் வழிப்போக்கன் காலம். அதாவது, கோயம்புத்தூரை சுற்றினார். பதின்ம வயதில், ஒரு ஹோட்டலில் அவருக்கு வெயிட்டர் வேலை கிடைத்தது. அங்கே வேலைபார்த்துக்கொண்டே அப்படியே மெக்கானிக் வேலையையும் கற்றுக்கொண்டார். அது தான் எல்லாம்! அப்புறம் அவர் கோயம்பத்தூரைச் சுற்றவில்லை, கோயம்புத்தூர் அவரைச் சுற்றியது!
- எப்போதுமே புதுமை நோக்கி மனதை விரித்திருக்கும் வித்தியாச மனிதராக இருந்தார், ஜிடி நாயுடு. புதுமலரைக் கண்டு உவகை கொள்ளும் பட்டாம்பூச்சி போல, புதுமழையைக் கண்டு தேகம் சிலிர்க்கும் நாரைப்பறவை போல, புதிதாக இருக்கும் எது ஒன்றும் அவரை உற்சாகம் கொள்ளவைத்தது. முதலில் புதுமைகளின் மீது அவர் ஐயம் கொள்வார். அப்புறம், அந்த புதுமை என்னவென்பதை அறிய ஆர்வம் கொள்வார். அந்த ஆர்வத்தில் இருந்து ஒவ்வொரு நூலாக பிடித்து, அந்தப் புதுமையை படைப்பாக மாற்றி வெற்றி காண்பார். உதாரணத்துக்கு, அவரது கார் மோட்டார் கண்டுபிடிப்புகளை எடுத்துக்கொள்வோம். ஒருநாள் அவரது காலங்கல் கிராமத்துக்கு காரில் வருகை தரும் வருமானத்துறை அதிகாரியைப் பார்க்கிறார். அவரோடு நட்பாகி அந்தக் காரைப்பற்றி விசாரிக்கிறார். அப்புறம் அந்த நினைவுகளை அப்படியே சேமித்துவைத்து, பின்னாளில் கார் மோட்டாரை உருவாக்குகிறார்!
- ‘நதிகளில் பாசிபடியாது’ என்பார்கள். அதாவது, ஓடிக்கொண்டே இருப்பவனின் வாழ்க்கையில் துயரங்களே இருக்காது. ஜிடி நாயுடு அப்படி ஓடிக்கொண்டே இருந்தவர். அதே போல, எந்தவித அரசியல் பற்றுகளோடும் ஜிடி நாயுடு ஒன்றிக்கொள்ளவில்லை. இது முக்கியமானது! நாடு, மாநிலம், இனம் என எதுவும் ஜிடி நாயுடுவை கட்டுப்படுத்தவில்லை என்பதை, அவரது வரலாற்றைப் படித்தால் உணரமுடிகிறது. அவர் கண்டுபிடித்த ஷேவிங் ரேஸருக்கு இந்தியாவில் காப்புரிமை கொடுக்கமுடியாது என்று சொல்கிறார்கள். ஜிடி நாயுடு யோசிக்கவே இல்லை. ’வண்டியை ஐரோப்பாவுக்கு திருப்புடா…’ என்று, ஓமக்குச்சி நாராயணன் போல முடியை கோதிவிட்டுக்கொண்டே கிளம்புகிறார். அதெல்லாம் அதகள ரகம்! ஜிடி நாயுடுவைப் பொறுத்தவரை கண்டுபிடிப்புகள் தான் எல்லாமே. ஆனால், அந்த கண்டுபிடிப்புகளுமே கூட அவர் அடுத்த டாஸ்க்கை தேர்ந்தெடுக்கும் வரைக்கும் தான். அப்படி தேர்ந்தெடுத்த பிறகு அதுவுமே அவருக்கு மறந்துபோகும். ரேஸர் பிளேடுகளையும், ஃபோர் ஸ்ட்ரோக் மோட்டர்களையும் அவர் 1950களுக்கு மேல் நினைத்துப்பார்த்தாரா என்றே சந்தேகமாக இருக்கிறது.
- ‘பிரச்சனையை தீர்ப்பவனே உண்மையான தொழில்முனைவோன்’ என்பது ஒரு எழுதப்பட்ட விதி! அந்த வகையில், இந்தியாவின் முதல் அதிகாரப்பூர்வ தொழில்முனைவோன் என்று ஜிடி நாயுடுவை சொல்லலாம். டாட்டாவும், பிர்லாவும் கம்பெனி நடத்தினார்கள் தான். ஆனால், அவர்கள் ஒரு ரூபாய் போட்டு பத்து ரூபாய் எடுக்கப்பார்த்த வணிகர்கள். ஆனால், ஜிடி நாயுடு மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க, ஒவ்வொரு கம்பெனியாக ஏற்படுத்திக் கொண்டிருந்தார். டாட்டாவிடம் அவ்வளவு பணமிருந்தும், இந்தியாவின் முதல் போக்குவரத்து சேவையை ஜிடி நாயுடு தான் தொடங்க வேண்டியிருந்தது. பிர்லா கம்பெனியும கட்டுமானப் பொருட்களை உருவாக்கியது தான். ஆனால், ஏழைகளுக்கான மலிவுவிலை சிமெண்ட் கலவையை உருவாக்க ஜிடி நாயுடுவுக்கே தோன்றியது. ஆகவே தான், இந்தியா இதுவரை கண்டதிலேயே மாபெரும் தொழில்முனைவாளன் என்ற பட்டத்தை எளிதாக வெல்கிறார், ஜிடி நாயுடு!
- ஜிடி நாயுடு இல்லாமல் கோயம்புத்தூர் இல்லை. இன்றைய கோயம்புத்தூரின் ஒவ்வொரு அங்குல வளர்ச்சிக்குப் பின்னாலும், ஜிடிநாயுடுவின் அயராத உழைப்பு இருக்கிறது. 1930 – 40களில் ஜெர்மனி தான், தொழில்வளர்ச்சியின் அடையாளமாக இருந்தது. அப்படிப்பட்ட ஜெர்மனியில், ‘Coimbatore, India’ என்று தலைப்பிடப்பட்ட பொருட்களை அணிவகுக்க வைத்தார், ஜிடி நாயுடு. அடுத்து, அவரது பங்களிப்பில், கோயம்புத்தூரில் ’லட்சுமி மெஷின்ஸ்’ உருவானது. யு.எம்.எஸ்ஸூம் (United Motor Services) கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டே உருவாக்கப்பட்டது. அவரது விவசாயப் பண்ணையும் கூட கோயம்புத்தூரிலேயே நிர்மாணிக்கப்பட்டது. 1945ல் ஜிடி நாயுடு உருவாக்கிய ஆர்தர் ஹோப் பாலிடெக்னிக் கல்லூரி (தற்போது, அரசு தொழில்நுட்ப கல்லூரி) தான், கோயம்புத்தூருக்கு தொழில்வாசனையை காட்டிய முதல் கல்லூரி. இப்படி நிறைய சொல்லலாம்! இன்றைய கோவையில் மக்களின் கவனத்தை அதிகம் ஈர்ப்பதாக இருக்கும் இடமும், ஜிடி நாயுடு அருங்காட்சியகமே. ஆக, கோயம்புத்தூர்காரர்களுக்கு மட்டும் , ‘செத்தும் கொடுத்தான் ஜிடி நாயுடு’ என்பதே சரி!
- ஜிடி நாயுடுவிடம் இருந்து கற்பதற்கு இன்றைய இளைஞர்களுக்கு நிறையவே பாடங்கள் இருக்கின்றன. முதலில், அவர் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்தவர். அடுத்தவன் என்ன சொல்வான் என்று அவர் கவலைப்பட்டதே இல்லை. எவனாவது, ‘What is your business name?’ என்று கலாய்க்க கேட்டால் கூட, ‘ ‘It is not your business’ is my business name’ என்று திரும்ப கலாய்த்தார், ஜிடி நாயுடு. அடுத்து, அவர் எப்போதுமே தாழ்வுணர்ச்சிக்கு இடம் கொடுக்கவே இல்லை. ‘முட்டாள், பைத்தியக்காரன், உதவாக்கரை’ என்று ஊரே திட்டினால் கூட, ‘I expect more guys…’ என்று கூலாக, வேட்டியை மடித்துக்கட்டி நடந்தார், ஜிடி நாயுடு. அப்புறம் முக்கியமாக, அவர் தோல்விக்கு அஞ்சவே இல்லை. ஒருமுறை தோற்றால் அதைவிட உத்வேகத்துடன் எழுந்து மீண்டும் தோற்பார். பின்னர், மீண்டும். எத்தனையாவது முறை ஜெயிப்பார் என்று அவருக்கே தெரியாது. ஆனால், வென்றுவிட்டுத்தான் அமர்வார்!
- எப்போதுமே தொழிலதிபர்கள் ஒரு தொழில் செய்வார்கள். அப்புறம், அந்த தொழில் தரும் அழுத்தத்தில் இருந்து தப்பிக்க, ஹார்ஸ் ரேஸிங், கேம்பிளிங், கோல்ஃப் போன்றவற்றை ஹாபியாக வைத்திருப்பார்கள். ஆனால், ஜிடிநாயுடுவுக்கு ஹாபியும் கூட தொழிலே தான். அதாவது, அவருக்கு ஒருமுறை கேமிராக்களின் மீது ஆர்வம் ஏற்படுகிறது. அப்போது அவர் டிரான்ஸ்போர்ட் கம்பெனி வேறு நடத்திக்கொண்டிருக்கிறார். ஆனாலும், அவர் கேமிராவை ஒரு ஹாபியாக எடுத்துக்கொள்ளவில்லை. வித்தியாசமான பிலிம் ரோல்களை கண்டுபிடித்து, இங்கிலாந்து அரசரின் இறுதி ஊர்வலத்தை படம்பிடிக்க கிளம்புகிறார். ‘சாருக்கு பிஸினஸ் தான் எல்லாமே…’ என்ற பதத்தை, தொழிலதிபர்களின் வீட்டார் சொல்வதை கேட்டிருப்பீர்கள். ஆனால், ஜிடி நாயுடுவின் வீட்டார் மட்டும் ‘சாருக்கு எல்லாமே பிஸினஸ் தான்…’ என்று சொல்வார்கள்!
- நினைத்ததையெல்லாம் எட்டிவிட்டு, ஆசைப்பட்டதையெல்லாம் அடைந்துவிட்டு, 1974ம் ஆண்டு இறந்தார், ஜிடி நாயுடு. ‘முதலில், இந்திய அரசு அவர் பெயரில் தபால் தலை வெளியிட்டது. அடுத்து, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அவருக்கு சிலை எழுப்பப்பட்டது. பின்னர், பாரத ரத்னா விருதுக்கும் கூட அவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது’ என்றெல்லாம் சொல்ல ஆசை தான். ஆனால், இது எதுவுமே நடக்கவில்லை. என்றாலும், ஜிடி நாயுடுவைக் கொண்டாடுவதில் நமக்கு அதெல்லாம் ஒரு தடையும் இல்லை!
- கடைசியாக, ஜிடி நாயுடுவின் கண்டிபிடிப்புகள்: எலெக்ட்ரிக் ரேஸர், தமிழ் டயல் கொண்ட ரேடியோ, சுவர் கடிகாரம், ஸ்பிரிங் ஜூஸர், கிழங்கு தோல் எடுக்கும் கருவி, தானியங்கி ஒளிப்பட கருவி, ரேடியோகிராம், சாணம் கலந்து உருவாக்கப்பட்ட மலிவுவிலை சிமெண்ட் கலவை, மின்சார பம்ப்… இவையெல்லாம் உலகுக்கு தெரிந்து! உலகுக்கு தெரியாமல் இன்னும் என்னவெல்லாம் கண்டுபிடித்திருந்தார் என்பது, அவரே எவர் கனவிலேனும் வந்து சொன்னால் தான் உண்டு!