leader-profile-image

தியடோர் பாஸ்கரன்

  • தமிழ்த் திரை ஆய்வின் பிதாமகன், தியடோர் பாஸ்கரன்! அவரது, History through the lens : Perspectives on South Indian cinema, The eye of the serpent ஆகிய புத்தகங்கள், தமிழர்களின் மனதுக்குள் காலத்துக்கும் நின்று காட்சி சுருளை சுற்றுபவை!
  • திரை ஆய்வு என்றில்லை, பண்பாட்டு ஆய்விலும் தியடோர் வல்லவர். ஆனால், அவரது ஆய்வுக்கருத்துகள் எல்லாமே நதிப்போக்குக்கு எதிராக படகை செலுத்தும் படகோட்டியின் துணிவு கொண்டவையாக இருக்கும். உதாரணத்துக்கு, ஊர்ப்பெயர் ஆய்வை எடுத்துக்கொள்வோம். பொதுவாக, தாய்மொழியில் ஊர்ப்பெயர்கள் இருத்தலே நலம் என்பது ஏற்கப்பட்ட ஒரு கருத்து. ஆனால், தியோடர் அதை உடைப்பார். ‘ஊர்ப்பெயர்கள் என்பவை வரலாற்றின் இழைகள். ஒரு நிலத்தின் பண்பாட்டுக்கு அவையே தொடர்ச்சியை அளிக்கின்றன.. ஆனால், நாம் என்ன செய்கிறோம்? உதகமண்ட் என்ற பெயரை உதகமண்டலம் என்று மாற்றி அந்தத் தொடர்ச்சியை அழிக்கிறோம்’ என்று சொல்வார். 
  • ‘Ask new question…’ இது தான் வரலாற்றாய்வு மேடைகளில் தியடோர் அடிக்கடி உச்சரிக்கும் வாசகம். ’வரலாற்றின் மீது புதிய கேள்விகளை எழுப்பினால் மட்டுமே, புதிய தரவுகளை நோக்கி நம்மால் செல்லமுடியும்’ என்பது அவரது நம்பிக்கை!
  • ஏற்கனவே சொன்னபடி, தியடோர் வரலாற்றை எதிர்ப்பக்கத்தில் இருந்து அணுகும் குணம் கொண்டவர். ஒரு சமூகத்துக்கு கண்டிப்பாக அப்படி ஒருவர் அவசியம். தியோடரின் புகழ்பெற்ற உரை ஒன்று உண்டு. அதில், ‘என்ன வரலாற்றை நாம் எழுதுகிறோம்? கல்வெட்டுகளில் இருந்து எழுத்துக்களை எடுத்து அப்படியே ஒப்புவிக்கிறோம். ஆனால், அதனை மறுஆய்வுக்குட்படுத்த நாம் எப்போதுமே முற்படுவதில்லை. தாமஸ் ஸ்ட்ராக்மேன் என்ற அமெரிக்க ஆய்வாளர் அர்த்த சாஸ்திரத்தை மாற்றுக்கோணத்தில் ஆராய்ந்து, அதை எழுதியது ஒருவரல்ல, நான்கு பேர் என்று கண்டுபிடித்திருக்கிறார். அப்படி ஏன் நம்மால் திருக்குறளை இங்கே ஆய்வுசெய்யமுடியாது? அப்படி ஆய்வு செய்தால், நமக்கும் பல திருவள்ளுவர்கள் கிடைப்பார்கள் அல்லவா! ஆகவே, எது ஒன்றையும் ஒற்றைப்பரிமாணத்தில் அல்லாமல் பல்வேறு பரிமாணங்களில் ஆய்வு செய்து பாருங்கள்’ என்று, ஏகப்பட்ட விழிதிறப்புகளை அளிப்பார், தியடோர். அந்த முறுக்குமூசையோடு சேர்த்து கொஞ்சம் தாடியும் வளர்த்தார் என்றால், கண்டிப்பாக அவரை ஆய்வுலகின் பெரியார் என்று அழைக்கலாம். தப்பே இல்லை!
  • கல்வெட்டுகளின் மீது தியடோர் கோபம் கொள்வதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அதாவது, அவையெல்லாமே அரசர்களின் வரலாற்றை மட்டுமே சொல்பவை. ‘இந்த அரசர் இந்த இடத்தில் இப்படியொரு கோயிலை கட்டினார், இப்படியொரு குளத்தை வெட்டினார்… ’ என்றே பெரும்பாலான கல்வெட்டுகள் தகவல்கள் கூறும். அதனால், நமக்கு கிடைப்பது வெறும் அவைப்புகழொலிகள் மட்டுமே. ஆகவே, ‘நாட்டார் பாடல்களையும், சினிமா போன்ற கலைகளையும் ஆய்வு செய்யுங்கள். அதில் தான் உண்மையான மக்களின் வரலாறுகள் இருக்கும்’ என்று சொல்வார், தியடோர்.
  • சுற்றுச்சூழல் தளத்திலும் வியப்புக்குரிய பணிகளை ஆற்றியிருக்கிறார், தியடோர் பாஸ்கரன். தமிழ்நாட்டில் சுற்றுசூழல் குறித்த விழிப்புணர்வை பரவலாக்கிய முதல் மனிதர் என்று கூட, தியடோரைச் சொல்லலாம். தியடோருக்கு முன்னால் இங்கே சுற்றுச்சூழல் ஆய்வாளர்களே இல்லையா? இருந்தார்கள்! ஆனால், அவர்கள் வெறுமனே தகவல்களை மட்டுமே கொட்டிச் சென்றார்கள். தகவல்கள் அறிவளிப்பவை. ஆனால், அவை மக்களின் உணர்வைத் தூண்டி காரியமாற்ற வைப்பவை, அல்ல. எனவே, தகவல்களைக் கடந்து இயற்கையின் அழகையும் அதன் ஆர்ப்பரிப்பையும் வார்த்தைகளில் வர்ணித்து மக்களை உசுப்பினார், தியடோர். பின்னர், அவரைப் பின் தொடர்ந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சூழலியல் ஆர்வலர்களாக மாறினார்கள். அந்த மாற்றம் இன்றும் தொடர்கிறது!
  • தியடோர் பாஸ்கரன் எழுதிய ‘இன்னும் பிறக்காத தலைமுறைக்காக’ புத்தகம், சூழலியலுக்கு அவர் அளித்த அழியா கொடை! இப்போது, கையில் கெனான் கேமிராவை எடுத்துக்கொண்டு ‘Nature Lover’ என்று ஏகப்பட்ட பேர் கிளம்புகிறார்கள். ஆனால், உண்மையான ‘Nature Loving’ என்றால் என்னவென்பதை, தியடோரின் ‘இன்னும் பிறக்காத தலைமுறைக்காக’ புத்தகத்தில் நாம் உணரலாம். ‘கானமயிலும், சிவிங்கப்புலியும் தமிழகத்தில் இருந்தன. ஆனால், அவை அழிந்துவிட்டன’ என்ற தகவல்களெல்லாம் அந்தப் புத்தகத்தை படித்தால் மட்டுமே எவருக்கும் தெரியும். 
  • செல்லப்பிராணிகள் வளர்ப்பு இன்று இந்தியாவின் செல்வம் கொழிக்கும் ஒரு துறையாக வளர்ந்து நிற்கிறது. ஐபிஎல்லில் கோடிகள் கொடுத்து Pedigree கம்பெனி விளம்பரம் கொடுக்கிறான். ஆனால், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆண்டுக்கணக்காக ஆய்வுசெய்து ’இந்தியாவின் நாய் இனங்கள்’ என்ற புத்தகத்தை வெளியிட்டார், தியடோர். 
  • சில நேரங்களில் வாத்தியார்கள் மாணவர்களின் பெஞ்ச்களில் அமர்வதுண்டு. அப்படி, சில திரைப்படங்களிலும் கூட நடித்திருக்கிறார், தியடோர் பாஸ்கரன். ’பருவம் தப்பிய மழை, இருந்தாலும் அழகான மழை’ என விமர்சகர்களால் பாராட்டப்பட்ட ‘அவள் பெயர் தமிழரசி’ திரைப்படத்தில் தியடோரை நாம் மிகவும் ரசிக்கலாம். 
  • ‘இன்றைய எல்லாப்பிரச்சனைக்கும் ஆணிவேர் வரலாற்றில் தான் இருக்கின்றன. அதைப் புரிந்துகொள்ளாமல் நம்மால் தீர்வு நோக்கி நகரமுடியாது’ என்பது, தியடோர் பாஸ்கரனின் காவிய வாக்கியம்!