leader-profile-image

ஐராவதம் மகாதேவன்

  • தமிழ் மொழியியல் மற்றும் ஹரப்பா நாகரிக ஆய்வின் தளகர்த்தர், ஐராவதம் மகாதேவன்! இன்று நாம் கொண்டாடும் ‘தமிழி’ எழுத்துக்களை முதன்முதலில் படித்து உலகுக்குச் சொன்ன பெருமைக்குரியவர்!
  • 1930ம் ஆண்டு காவிரிக்கரையான திருச்சியில் ஐராவதம் மகாதேவனின் பிறப்பு நிகழ்ந்தது. படிப்பும் அங்கே தான். வேதியியல், அறிவியல், சட்டம் என எல்லாவற்றிலும் பட்டம் பெற்றபிறகு, 24வது வயதில் குடிமைப்பணி அதிகாரியாக இணைந்தார், மகாதேவன். 27 ஆண்டுகள் அவர் அந்தப் பதவியில் இருந்தார். அதன்பின்பு, விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு வரலாற்று ஆய்வின் பக்கம் வந்துவிட்டார்.
  • ஆரம்பத்தில் ஐராவதம் மகாதேவனுக்கு நாணய சேகரிப்பில் மட்டுமே ஆர்வமிருந்தது. அதை ஒரு பொழுதுபோக்காக செய்துவந்தார். அப்புறம், நாணயத்தில் இருந்த வித்தியாச எழுத்துகள் அவரை மொழி ஆய்வை நோக்கி நகர்த்தின. அப்போதும், தமிழ்மொழியின் வேரை தேடிச்சென்று கண்டுபிடிப்பதிலேயே அதிகம் கவனம் செலுத்தினார், மகாதேவன்.
  • மகாதேவனின் முதல் சாதனை, அசோகன் பிராமி எழுத்துகளில் இருந்து வேறுபட்டவை தமிழ் பிராமி எழுத்துகள் என்று நிறுவியது! இதற்கு அவருக்கு ஜெர்மானிய இந்தியவியல் ஆய்வாளர் Buhler-ன் குறிப்புகள் உதவின. சென்னையின் வடக்கே இருக்கும் பொட்டிபொரலுவில் Buhler-க்கு சில பிராமி கல்வெட்டுகள் கிடைத்தன. ஆரம்பத்தில் அவர் அதை அசோகன் பிராமியென்றே கருதினார். ஆனால், அசோகன் பிராமியின் உயிரெழுத்து வகைகளுக்கும் இவற்றுக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. எனவே, ‘இது அசோகன் பிராமியாக இருக்கமுடியாது. வேறு ஏதோ ஒன்று’ என்ற முடிவுக்கு வந்தார், Buhler. மகாதேவன் அந்த ‘வேறு ஏதோ ஒன்று…’ என்ற வார்த்தையில் இருந்து ஆய்வைத்தொடங்கினார். பயணத்தின் சில அடிகளிலேயே, பால்பற்கள் தெரிய அவருக்கு முன்னால் நின்று அன்பாக சிரித்தது, ’தமிழி’!
  • 1960களில், பண்டைய தமிழ் மன்னர்களான நெடுஞ்செழியன் மற்றும் இரும்பொறையின் பெயர்களை, கல்வெட்டுகளில் இருந்து வெற்றிகரமாக படித்துக்காட்டினார், ஐராவதம் மகாதேவன். இருவரில் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் கல்வெட்டே பழமையானது. அதாவது, கிமு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அது இருந்தது. அதன் கண்டுபிடிப்பு இடம், மதுரை! சேரமன்னன் இரும்பொறையின் கல்வெட்டு கரூருக்கு அருகே புகலூரில் கண்டெடுக்கப்பட்டது. அவரை, கிமு இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் மன்னராக நிறுவுகிறார், ஐராவதம் மகாதேவன்!
  • ‘சிந்துவெளி நாகரிகம் திராவிடப் பண்பாடே’ என்பது, ஐராவதம் மகாதேவனுக்கு முன்புவரை ஒரு தியரியாக மட்டுமே இருந்தது. ஆனால், மகாதேவன் அதை தகுந்த மொழியியல் ஆய்வுகளுடன் உறுதிப்படுத்தினார். ‘இந்தியவியலில் இரண்டுவகை மொழிக் குடும்பங்களே இருக்கின்றன. ஒன்று, இந்தோ – ஆரியன், இன்னொன்று திராவிடம். இதில், இந்தோ ஆரியன் வகை எழுத்துகள் சிந்துவெளியில் புழங்கவில்லை. அங்கே புழங்கியது திராவிட மொழியே. ஆகவே, சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகமாக இருப்பதற்கே அதிக வாய்ப்பு’ என்று வாதத்தை அவர் முன்வைத்தார். இதற்கு ஆதாரமாக பலுசிஸ்தான் மற்றும் ஈரானின் சில பகுதிகளில் இன்றும் புழக்கத்தில் இருக்கும் Brahui மொழியை அவர் காட்டினார். Brahui உறுதிப்படுத்தப்பட்ட ஒரு திராவிட மொழி!
  • ஐராவதம் மகாதேவனுக்கு சிக்கல்கள் இல்லாமல் இல்லை. ‘சரி… ஹரப்பா நாகரிகம் ஆரிய நாகரிகமாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால், அது ஏன் சுமேரியன் அல்லது அக்காடியன் நாகரிகமாக இருக்கக்கூடாது…’ என்ற வாதங்களை மேற்கு ஆய்வாளர்கள் முன்வைத்தார்கள். சுமேரியன், அக்காடியன் ஆகியவை கிரேக்க தொடர்ச்சிகொண்ட நாகரிகங்கள். ஆனால், மகாதேவன் அந்த வாதங்களையும் உடைத்தார்.  ‘இல்லை… ஹரப்பாவின் எந்த இடத்திலும் சுமேரிய – அக்காடிய மொழிக்குறியீடுகள் இல்லை. ஒரு சிறிய அளவில் அந்த மொழிகள் ஹரப்பா மக்களால் பேசப்பட்டிருந்தாலும், இன்றிருக்கும் நவீன பாகிஸ்தானிய மற்றும் வடஇந்திய மொழிகளில் அதன் சுவடுகள் இருக்கும். அப்படி எதுவுமே இதுவரை கிடைக்கப்பெறவில்லை…’ என்று தெளிவாக எடுத்துரைத்தார், மகாதேவன். [ Note: பாபிலோனில் கிடைத்த ‘களிமண் படிமம் (Clay Tablet)’ போன்ற நீளமான குறியீடுகளைக் கொண்ட பொருள் எதுவும் இதுவரை ஹரப்பா – மொகஞ்சதாரோவில் கிடைக்கவில்லை. அப்படி ஒரு பொருள் எதிர்காலத்தில் கிடைக்குமாயின், கண்டிப்பாக ஐராவதத்தின் வாதங்கள் மீள்பரிசீலனை செய்யப்படும்]
  • ஹரப்பா நாகரிகத்தை ஆரிய நாகரிகமாக சித்தரிக்க அடுத்து முன்வைக்கப்பட்ட வாதம், மதம்! ஹரப்பாவில் கிடைத்ததிலேயே மிகவும் அரிய மற்றும் முழுமையான பொருள், யூனிகார்ன். கொம்புகள் கொண்ட குதிரைவடிவ விலங்கையே நாம் யூனிகார்ன் என்று அழைக்கிறோம். சரி அதற்கும் மதத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? இருக்கிறது! அதாவது, ஹராப்பாவில் கிடைத்த யூனிகார்னுக்கு முன்னால் ஒரு மதுக்குடுவை போன்ற வடிவம் உள்ளது. இதை சோமபானம் என வகைப்படுத்தி, ஹரப்பா மக்கள் சிவனை வழிபட்டவர்கள் என்று கதை பரப்பப்பட்டது. ஆனால் ஐராவதம், ‘அது சோமபானம் கொண்ட மதுக்குடுவை அல்ல, சாதாரண சல்லடை’ என்று எடுத்துரைத்தார். ஆனாலும், மதப்பிரியர்கள் சளைக்கவில்லை. ‘அது ஏன் சோமபான சல்லடையாக இருக்கக்கூடாது…’ என்று மீண்டும் அடம்பிடித்தார்கள். ஐராவதம் ஆதாரங்களுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் மெனக்கெடக்கூடியவர். ஆகவே, அவர் இந்துமதத்தின் ஆதிநூலான ரிக்வேதத்தில் இருக்கும் ‘சோமா’ அத்தியாயத்தை ஒரு வருடம் அமர்ந்து ஆராய்ந்தார். அதில், சோமபானத்தை சலிக்கும் சல்லடைகளாக குறிப்பிடப்பட்டிருக்கும் ‘பவமனா மற்றும் இந்து (Pavamana and Indu)’ ஆகிய இரண்டு சல்லடைகளை அவர் வட்டமிட்டார். ‘பாருங்கள்… இந்த வடிவத்துக்கும் ஹரப்பா வடிவத்துக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா…’ என்று திரும்பிவந்து கேட்டார். மதப்பிரியர்கள் அதிர்ந்து அமைதியானார்கள்.
  • ஹரப்பாவின் யூனிகார்னே கூட ‘இந்து மதத்தின் அடையாளமான அஸ்வம் (குதிரை) தான்’ என்று கிளம்பினார்கள், மதப்பிரியர்கள். ஆனால், ஐராவதம் அதற்கும் பதில் வைத்திருந்தார். ‘ஹரப்பா காலத்தில் குதிரைகளும் இல்லை, குதிரைகளைப் பூட்டும் தேர்களும் இல்லை, தேர்களை இழுத்துச்செல்லும் ஆரங்கள் கொண்ட சக்கரங்களும் இல்லை. அப்புறம் எப்படி அதை அஸ்வம் என்கிறீர்கள்? அந்த அஸ்வத்தை எப்படி இந்து பண்பாட்டின் அடையாளம் என்கிறீர்கள்?’ என்று துளைத்தார். இப்போதும் மதப்பிரியர்களிடம் இருந்து அமைதியே பதிலாக கிடைத்தது.
  • ஐராவதம் மகாதேவனைப் பற்றி இன்னும் நிறைய சொல்லிக்கோண்டே போகலாம். அவர் ஆய்வுகள் ஆழியென ஆழம் கொண்டவை மற்றும் வாளியென கூர்மை கொண்டவை! 50 வயதுக்கு மேல் ஆய்வைத் தொடங்கி, வரலாற்றியலை படிப்பாக படித்தவர்களையே மிரளவைத்த அற்புதம், அவர்! சந்தேகமே இல்லை… இம்மண்ணில் ’வரலாறு’ என்ற சொல் நீடிக்கும் வரை, ‘ஐராவதம் மகாதேவன்’ என்ற சொல்லும் நீடிக்கும்!