leader-profile-image

சுப்பிரமணியன் சந்திரசேகர்

  • இந்தியாவின் ஐன்ஸ்டீன், சுப்பிரமணியன் சந்திரசேகர்! ஜாதகக் கட்டங்களுக்குள் அடங்கி கிடந்த இந்திய வான் அறிவியலை, கருந்துளை நோக்கி கொண்டுசென்ற மகத்தான சாதனையாளன்!
  • சுப்பிரமணியன் சந்திரசேகர், தமிழகத்துக்கு வெளியே பிறந்த தமிழர்! 1910ம் ஆண்டு லாகூரில், சுப்பிரமணியன் – சீதா தம்பதியினருக்கு பிறந்தார், சந்திரசேகர். அவரது அம்மா சீதா, மிகச்சிறந்த படிப்பாளர். அந்தக் காலத்திலேயே, ஏராளமான வெளிநாட்டுப்புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்து பெயர் வாங்கியிருந்தார், அவர். எனவே, அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்த சந்திரசேகருக்கு, படிப்பு இயல்பாகவே கைவந்தது. இருபது வயதுக்குள்ளாகவே, மெட்ராஸ் பிரசிடென்சி கல்லூரியில், அவர் இயற்பியல் பட்டம் பெற்றுவிட்டார். 1933ல், புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் வாங்கியபின், 1935ம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகம் அவரை அள்ளியணைத்துக் கொண்டது.
  • சந்திரசேகரை இந்தியாவின் ஐன்ஸ்டீன் என்று சொன்னது சரியா? மிகச்சரி. ஐன்ஸ்டீனைப் போலவே, உட்கார்ந்த இடத்திலேயே இருந்துகொண்டு, வெறும் கணித வாய்ப்புகளின் மூலமே பிரபஞ்சத்தை அறிந்தவர், சந்திரசேகர். ஐன்ஸ்டீனின் ரிலேட்டிவிட்டி தியரியான E = mc²-க்கு சற்றும் குறைவில்லாதது, சந்திரசேகரின் 1.44 M☉ லிமிட். இப்படிப்பட்ட சந்திரசேகரின் பெயரை நம்முடைய பாடப்புத்தகங்களில் நாம் அவ்வளவாக காணமுடியாது. ஆய்வாளர்கள் கூட அவரது பெயரை மேம்போக்காகவே பயன்படுத்துவார்கள். ஏனென்றால், சந்திரசேகர் எல்லோராலும் கைவிடப்பட்டவர். கிட்டத்தட்ட, ஒரு அறிவியல் அகதி!
  • சந்திரசேகரின் கண்டுபிடிப்பைப் பற்றி ஒரு பத்தியில் சொல்வது கடினம். இருந்தாலும் முயல்வோம். அவரது மைய ஆராய்ச்சி எப்போதும் கருந்துளைகள் சார்ந்ததாகவே இருந்தது. அவரது காலத்தில் அதன் பெயர், இருள் நட்சத்திரம் (Dark Star). அந்த இருள் நட்சத்திரத்தின் இயல்புகள் என்ன, எதனால் அவை இருள் நட்சத்திரமாக மாறுகின்றன, அப்படி மாறும் இருள் நட்சத்திரங்கள் விண்வெளியில் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன என்பதைக் குறித்தெல்லாம், விரிவாக ஆராய்ந்தார் சந்திரசேகர். அப்போது அவருக்கு வயது இருபதில் இருந்து இருபந்தைக்குள் இருக்கும். ஓகே! நட்சத்திரங்கள் என்பவை வாயுக்களால் ஆனவை. பெரும்பாலும் ஹீலியம் வாயு. அது விடாமல் எரிந்து கொண்டிருப்பதாலேயே எந்த நட்சத்திரமும் உயிரோடு இருக்கிறது. ஆனால், ஹீலியத்துக்கும் ஆயுட்காலம் உண்டு. அப்படி ஆயுட்காலத்தை ஹீலியம் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கும்போது, நட்சத்திரங்கள் உருவில் சுருங்கத் தொடங்குகின்றன. அதாவது, ஹீலியத்தின் ஆயுட்காலம் முடியும் வரை இந்த சுருங்குதல் நடந்தபடியே இருக்கும். சரி… ஹீலியத்தின் ஆயுட்காலமும் முடிந்துவிட்டது. நட்சத்திரமும் சுருங்குவதை நிறுத்துவிட்டது. இப்போது அந்த நட்சத்திரம் என்னவாகும்? வெடித்துச் சிதறுமா அல்லது அதே நிலையில் அப்படியே நீடிக்குமா? இதற்குத் தான் விடை கண்டுபிடித்தார், சந்திரசேகர். அதாவது, சூரியனின் நிறையை விட 1.44 மடங்கு குறைவாக இருக்கும் நட்சத்திரம் White Dwarf- ஆக மாறி, விண்வெளியில் அப்படியே நீடிக்கிறது. இதனால், விண்வெளியில் இருக்கும் பிற பொருட்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. அதே , சூரியனின் நிறையை விட 1.4 மடங்கு அதிகமாக இருக்கும் நட்சத்திரம் ஒரு இருள் அரக்கனாக மாறி, தன்னைச்சுற்றி இருக்கும் எல்லாப் பொருட்களையும் உள்ளிழுத்து கிழித்தெரிகிறது. அதன் பிடியில் இருந்து ஒளிகூட தப்பமுடியாது. இவை தான் சந்திரசேகர் கண்டுபிடித்து சொன்னவை. ஆனால், 1930களில் அவரது இந்தக் கருத்துகளுக்கு, பெரிய ஆதரவு எழவில்லை. ஐன்ஸ்டீனே, சந்திரசேகரின் கணக்கீடுகள் தப்பு என்று தான் எண்ணம் கொண்டிருந்தார். அப்புறம், 50 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு, 1980களிலேயே சந்திரசேகரின் கருத்துகள் அறிவியல் உலகத்தால் முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
  • 1930களில் கணக்கிட்டு சொன்ன, ‘சந்திரசேகர் லிமிட்’ மட்டுமில்லை. அதற்குப் பிறகும், கருந்துளைகள் பற்றி தொடர்ச்சியான ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டு வந்தார், சுப்பிரமணியன் சந்திரசேகர். அதில், ‘An introduction to the study of structure, Principles of Steller Dynamics, The mathematic theory of black holes’ போன்ற ஆய்வுக்கட்டுரைகள், கருந்துளைகள் மற்றும் நட்சத்திரங்களைப் பற்றி மிகப்பெரிய தகவல்களை அளிப்பவை. இன்றும் கருந்துளைகளைப் பற்றி ஆராய கிளம்புபவர்களுக்கு அதுவே கர்த்தரின் பைபிள்!
  • சந்திரசேகர் வாழ்வு முழுவதும் வளர்ந்துகொண்டே இருந்த விஞ்ஞானி! 1929 – 1939 அவர் நட்சத்திரங்கள் மற்றும் கருந்துளைகளின் வடிவங்களை அறிவதில் ஆர்வம் காட்டினார். அடுத்து 1939 முதல் 1943 வரை, நட்சத்திரங்களின் ஆற்றலை அறிவதில் அவருக்கு விருப்பு உண்டானது. 1943 முதல் 1950 வரை, கதிரியக்கமும் குவாண்டமும் அவரது கவனத்தை ஈர்த்தன. 1950ல் இருந்து 1961 வரை ஹைட்ரஜன் ஆற்றலின் உட்கூறுகளை ஆராய்வதில் அவர் மூழ்கினார். 1960கள் அவர் வாழ்க்கையில் அமைதியானவை. அந்தப் பத்தாண்டுகளை, பொருட்களின் சமநிலைத்தன்மை மற்றும் முப்பரிமாண வடிவங்களை ஆராய பயன்படுத்திக்கொள்கிறார், சந்திரசேகர். அப்புறம், 1971ல் மீண்டும் கருந்துளைகளுக்கு வருகிறார். ஆனால், இந்த முறை கணிதச் சமன்பாடுகளின் வழியே அவரது கருந்துளை ஆய்வு செல்கிறது. இறுதிக்காலம் முழுவதும் நியூட்டனில் மூழ்கி விடுகிறார், சந்திரசேகர். இப்போது, அவரது நினைவாக நமக்கு 400 ஆய்வுக்கட்டுரைகள் கிடைக்கின்றன!
  • உண்மையில், சந்திரசேகர் அங்கீகாரத்துக்காக ஏங்கியவர். மேற்குலகம் எப்போதுமே அறிவை அவர்களுக்கான ஒன்றாகவே எப்போதும் கருதி வந்திருக்கிறது. Saving Private Ryan, The Terminal போன்ற படங்களை எடுத்த ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் கூட, Indiana Jones-ல், இந்தியர்களை மிகக் காட்டுமிராண்டிகளாகவே காட்டியிருப்பார். அவர்களுக்கு ‘Beautiful Mind’ கள் எல்லாமே, ஐரோப்பா, அமெரிக்கா பக்கமிருந்து மட்டுமே வரவேண்டும். இந்த சூழலில், ஐன்ஸ்டீனின் சார்பியல் தியரிகளையே உடைத்தெறியும் அறிவுடன் வந்த சந்திரசேகரை எப்படிப் பார்த்திருப்பார்கள், சொல்லுங்கள்? எனவே, சந்திரசேகர் புறக்கணிக்கப்பட்டார். ஐரோப்பியர்கள் எப்போதும் ஐன்ஸ்டீனையே தொழ எண்ணினார்கள். முக்கியமாக, ஐன்ஸ்டீனின் சிஷ்யன் என்றே அறியப்பட்ட ஆர்தர் எட்டிங்டன், ‘சந்திரசேகர் கதை கட்டுகிறார். நட்சத்திரங்கள் ஆற்றலை இழக்கும் என்பதெல்லாம் ரிலேட்டிவிட்டி கான்செப்டிலேயே கிடையாது’ என்றார். இதனாலே என்னவோ, 1960களில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் விடுத்த பணி அழைப்பை, மரியாதையோடு நிராகரித்தார், சந்திரசேகர். பின்னால், அவருக்கு நோபல் பதக்கமும் (1983), காப்ளே பதக்கமும் (1984) வழங்கி, பிராய்சித்தம் தேடிக்கொண்டது, ஐரோப்பிய சமூகம்.
  • ஒரு முரணாக, ஐரோப்பிய திறமையாளர்களை எப்போதுமே பாராட்டுபவராக இருந்திருக்கிறார், சந்திரசேகர். 1994ல் நோபல் அரங்கத்தில் அவர் ஆற்றிய ஒரு புகழ்பெற்ற உரை இருக்கிறது. அதில், ’அறிவியல் என்பது ஒரு கலை. அதன் அடிப்படையில் பார்த்தால், நியூட்டனும் மைக்கேலேஞ்சலோவும் ஒரே தட்டில் வைக்கப்பட வேண்டியவர்கள். இருவரின் படைப்பு மனநிலையும் ஒன்றே’ என்று சொன்னார், சந்திரசேகர். அதே உரையில், ஷேக்ஸ்பியரையும், பீத்தோவனையும் கூட வெகுவாக பாராட்டியிருப்பார், சந்திரசேகர். ‘ஷேக்ஸ்பியரும், நியூட்டனும், பீத்தோவனும், படைப்பு மனநிலை எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு ஆதாரங்கள், அழகியலை வேறு எவரையும் விட அதிகமாக உணர்த்தியவர்கள் மற்றும் அறிவியலை அவர்களின் வழியில் உச்சத்துக்கு கொண்டு சென்றவர்கள்’ என்ற அவரது வரி, அழிவற்றது!
  • 1995ம் ஆண்டு, 85வது வயதில் சிகாகோவில் இறந்தார், சுப்பிரமணியன் சந்திரசேகர். அப்போது, இங்கிலாந்தின் புகழ்பெற்ற வான் அறிவியலாளரான ரோஜர் டெய்லர், ’சந்திரசேகர் பேரறிவாளி. அவரது ஆய்வுகள் அவருக்கு மட்டுமே சாத்தியமானவை’ என்று எழுதினார். It is true to the core!