இமையம்
- தமிழகத்தில் வடபகுதி மக்களின் துயரங்களையும், வலிகளையும் படைப்பின் வழியே கடத்தும் ரசவாதப் படைப்பாளி இமையம்.
- நிஜ உலகின் உண்மையை எழுதுவதையே நோக்கமாகக் கொண்டிருக்கும் எழுத்தாளர். பழைய வாழ்க்கைக்கும் நவீன வாழ்க்கைக்கும் இடையிலான மோதலே அவரது படைப்புகள்.
- தான் எழுதும் ஒவ்வொரு வார்த்தையிலும் உச்சம் தொட நினைக்கும் படைப்பாளி இமையம்.`கோவேறு கழுதைகள்’, `செடல்’, `சாவு சோறு’, `செல்லாத பணம்’, `மண்பாரம்’, `வீடியோ மாரியம்மன்’, `பெத்தவன்’, `எங்கதே’, `வாழ்க வாழ்க’ என அவருடைய படைப்புகள் ஒவ்வொன்றும் தனி ரகம்.
- ஓர் இரவின் மத்தியில் ஓர் அழுகுரல் இமையத்தை உலுக்கிவிடுகிறது. `கோவேறு கழுதைகள்’ நாவல் தொடங்கிய புள்ளி இதுதான். இமையத்தின் முதல் படைப்பு. அவர் அதிகம் விமர்சிக்கப்பட்டதும் கொண்டாடப்பட்டதும் இந்த நாவலுக்காகத்தான்.
- பெண்களின் அக உலகை துல்லியமாக தனது எழுத்தில் பதிவு செய்து வரும் இமையம், தனது `எங்கதே’ நாவலின் வழியே உச்சம் தொட்டார்.
- `பெத்தவன்’ என்ற நாவலின் வழியே சாதிய மனோபாவத்தை தோலுரித்தவர். `பெத்தவன்’, `எங்கதே’ இரு படைப்புகளையும் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் பரிசுப் பொருளாய் தந்து, இமையத்தையும் இலக்கியத்தையும் தரம் உயர்த்தி வருகின்றனர் அவரது வாசகர்கள்.
- ஆங்கில புத்தகங்களுக்கான இணையான மதிப்பை தமிழில் நிறுவிய பதிப்பகம் ‘க்ரியா`. இமையத்தின் முதல் படைப்பு தொடங்கி, அண்மையில் வெளியான `வாழ்க வாழ்க’ நாவல் வரை அனைத்து படைப்புகளும் வெளியிட்டுள்ளது `க்ரியா’ மட்டுமே.
- “ `காலமாகிவிட்டார்’ போன்ற காலத்தால் அழியாத, பொருள் பொதிந்த ஒரு புதிய சொல்லை என்னால் எழுத முடிந்தால் அதுவே தன் பெரிய சாதனை” என்று சொல்லிக்கொள்ளும் இமையம் நம் காலத்தின் அசல் கலைஞன்.