எஸ். ராமகிருஷ்ணன்
- உலக இலக்கியத்தில் மாய யதார்த்தவாத எழுத்தின் தந்தை கேப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் என்றால் தமிழின் மார்க்வெஸ் எஸ்.ராமகிருஷ்ணன். பிரபல வார இதழில் இவர் எழுதிய `துணையெழுத்து’, `தேசாந்திரி’ போன்ற தொடர்கள் வாசகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை.
- கரிசல் மண்ணில் பிறந்து, வெக்கையை குடித்து அலையும் மனிதர்களின் பாடுகளை, ஏக்கங்களை, சின்ன சின்ன சந்தோஷங்களை தன் எழுத்தில் ஆழமாகப் பதிவு செய்து வரும் நட்சத்திர எழுத்தாளர்களில் ஒருவர்.
- வறுமையும், கறுமை படிந்த வறண்ட நிலபரப்பும், உக்கிரமான வெயிலும், ஊர்ந்து செல்லும் எறும்புகளும் என நுண்ணிய அவதானிப்புகளோடு கதைசொல்லும் திறன் பெற்ற எஸ்.ரா.வின் `நெடுங்குறுதி’ நாவல் இலக்கிய உலகில் பெரும்கவனம் ஈர்த்தது.
- இலக்கிய உலகில் எழுத்தும் பேச்சும் பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு ஒன்றாக இருப்பதில்லை. எஸ்.ராவின் எழுத்தை வாசிக்கும்போது எந்த வகையான பேரானுபவம் கிடைக்குமோ அதே அனுபவம் அவர் பேசுவதை கேட்டாலும் கிடைக்கும். உலக இலக்கியங்கள் குறித்து அவர் ஆற்றிய பேரூரைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
- அதிகாலை இரண்டு மணிக்கு எழுந்து எழுதும் பழக்கம் உடையவர், காட்சிக்கு எளியவர். எஸ்.ரா ஒருவருக்குதான் இலக்கிய குழு என்று ஏதுமில்லை. சக எழுத்து பயணிகள் குறித்து எதிர்மறையான எந்த கருத்துக்களையும் எழுதாதவர், பேசாதவர்.
- உலக சினிமா குறித்து தமிழில் அதிகம் எழுதி, வருபவர். சினிமாவிலும் பங்களிப்பு செய்து வருகிறார். `அவன் இவன்’, `சண்டைக்கோழி’ போன்ற படங்களில் அவரின் எழுத்து, சினிமா ரசிகர்களையும் ஈர்த்தது. வாஸ்கோடகாமா, அல்பெரூனி, மார்க்கோபோலோ போன்ற கடற்பயண சாகசக்காரர்களைப் பற்றி அவர் எழுதிய `கோடுகள் இல்லாத வரைபடம்’ பயணம் குறித்த கட்டுரைகளில் முக்கியமானது.
- “இலக்கின்றிப் பயணிப்பது ஒரு சாகசம். அதற்கு மனத்துணிச்சலும் தீராத விருப்பமும் தேவை” என்று கூறும் எஸ்.ரா. ஓர் இலக்கற்றப் பயணி. இந்தியா முழுக்க அவர் சுற்றியலைந்திருக்கிறார்.
- ரஜினி கொண்டாடும் எழுத்தாளர். ரஜினியின் வாழ்க்கையை நூலாக எழுதியவர். அது பலரின் மனதைப் புண்படுத்தும் என்பதால் ரஜினி அந்த நூலை வெளியிடவில்லை. எஸ்.ராமகிருஷ்ணன் `கனடா இயல் விருது’ பெற்றபோது, அதற்கான பாராட்டுக் கூட்டத்தில் ரஜினி பங்கேற்று, “வறுமையிலும் பணத்தைப் பற்றி சிந்திக்காமல்..எழுத்தைப் பற்றியே சிந்தித்தவர் எஸ்.ரா.” என பாராட்டினார்.
- ‘சண்டைக்கோழி’ படத்தில் இவர் எழுதிய வசனம்… பெண்ணியவாதிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்த, அன்றைய தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தார் எஸ்.ரா.
- இலக்கியம், பத்திரிகை, ஆய்வுகள், நாடகம், குறும்படம், சினிமா, பயிலரங்கம் என பன்முகமாய் இயங்கி தனித்த அடையாளத்தைப் பெற்றிருப்பவர். சாகித்திய அகாடமி உள்ளிட்ட பல விருதுகளால் அவரை கொண்டாடி வருகிறது இலக்கிய உலகம்.