கி. ராஜநாராயணன்
- இலக்கிய உலகின் முன்னத்தி ஏர் கி.ராஜநாராயணன். 98 வயதான போதும் எழுதித் தீராத கைகளுக்குச் சொந்தக்காரர். பல தலைமுறைகளைக் கடந்தும் இன்னும் புதிய கதைக் களன்களோடு எழுத்தின் வீச்சு குறையாத கரிசல்காட்டு கதைசொல்லி.
- கரிசல் காட்டு மனிதர்களின் ஆன்மாவை தனது படைப்புலகில் உலவ விட்ட முன்னோடி. கரிசல் வட்டார வழக்கு அகராதியை உருவாக்கியவர். இவரின் எழுத்துக்களால் பாதிக்கப்பட்டு பின்னால் எழுத வந்தோரில் பலர் இன்று நட்சத்திர எழுத்தாளர்கள்.
- இடதுசாரி சித்தாந்தத்தில் தீவிர நாட்டம் கொண்டவர். களப்போராளி. விவசாயிகள் பிரச்னைக்காகப் போராடி, சிறை சென்றவர்.
- ஏழாம் வகுப்பு வரை மட்டுமே பயின்றிருந்தாலும், பல்கலைக் கழகத்தில் சிறப்பு பேராசிரியராக உயர்ந்தவர். நாட்டுப்புறக் கதைகளை தேடித் தேடி தொகுத்தவர்.
- கி.ரா.வின் எழுத்தை ஆய்வு செய்து பி.ஹெச்.டி பட்டம் பெற்றவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். “மனிதனுக்கு வைத்தியம் செய்யணும்னா அதை கதைகளைக் கொண்டுதான் செய்ய முடியும்” என்று கூறும் கி.ரா.வின் மற்றொரு புகழ்பெற்ற வாக்கியம் “மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கினேன். பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல் மழையையேப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்!”.
- இயக்குநர் பாலசந்தர், தான் இயக்கிய `அச்சமில்லை அச்சமில்லை’ என்கிற படத்தில் இவரது வட்டார வழக்கைப் பயன்படுத்தியுள்ளார். இவரது `கிடை’ நாவல், இயக்குநர் அம்ஷன்குமாரால் `ஒருத்தி’ என்கிற திரைப்படமாக உருவானது.
- `மாயமான் (1956)’ தொடங்கி `அண்டரெண்டப் பட்சி (2020)’ வரை அவரின் நீண்ட எழுத்துப் பயணத்துக்கு நிகரான இன்னொரு ஆளுமை தமிழ் இலக்கியத்தில் இல்லை.