மாரியப்பன் தங்கவேலு
- இந்தியாவை தடகளத்தில் தலைநமிரவைத்த ‘தங்கத்தமிழன்’!
- சிறுவயதில் பேருந்து ஒன்று மோதியதில் எதிர்பாராதவிதமாக மாரியப்பனுக்கு வலதுகாலில் அடிபட்டது. ஆனாலும், ’வாழ்க்கை இத்தொடு முடிந்தது’ என்று அவர் ஒரே இடத்தில் அமரவில்லை. தொடர்ந்து போராடினார். இறுதியில், வென்றார்!
- முதலில் மாரியப்பனுக்கு வாலிபாலில் தான் ஆர்வம் இருந்தது. அவரை உயரம் தாண்டுதல் பக்கம் திருப்பியவர், தடகளப் பயிற்சியாளர் சத்தியநாராயணா. மாரியப்பனுக்கு அப்போது 18 வயது. 22 வயதில் அவர் இந்தியாவுக்கு தங்கம் வென்று கொடுத்துவிட்டார்.
- 2016 ரியோ பாராலாம்பிக்கில் மாரியப்பன் தங்கம் வாங்கிய தருணம் எந்தத் தமிழனுமே மறக்க முடியாதது. ஆண்கள் T42 உயரம் தாண்டுதல் பிரிவில் தான் மாரியப்பன் கலந்து கொண்டார். அதற்கு முன்னால் துனிஷியாவில் நடந்த தொடரில் மாரியப்பன் 1.78 மீட்டர் உயரத்தை தாண்டியிருந்தார். இப்போது அவருக்கு 1.89 மீட்டர் உயரம் நிர்ணயிக்கப்பட்டது. மாரியப்பனின் மனதில் அப்போது என்ன ஓடியது என்று தெரியவில்லை. சிறுவயதில் இருந்து அவர் அடைந்த அவமானங்கள் ஓடியிருக்கலாம். அந்த 1.89 மீட்டர் உயரம் அதுவரையிலான வாழ்க்கைத்துயரங்களின் உயரமாக தெரிந்தது. மாரியப்பன் அனைத்துவிசைகளையும் திரட்டி 1.89 மீட்டர் உயரத்தைத் தாண்டினார். அன்று அவர் வென்றது தங்கம் அல்ல, தன்மானம்!
- இதுவரை பாராலாம்பிக்கில் மூன்று இந்தியர்கள் தங்கம் வென்றிருக்கிறார்கள். 1972 ஆம் ஆண்டு நீச்சல் வீரர் முரளிகாந்த் பெட்கர் முதல் தங்கம் வென்றார். அதற்குப் பிறகு 32 ஆண்டுகள் நமக்கு தங்கம் இல்லை. 2004 ஆம் ஆண்டு தேவேந்திர ஜஜாரியா அந்தத் துயரை துடைத்தார். ‘ஜாவ்லின் த்ரோ’வில் அவர் தங்கம் வென்றார். மீண்டும் மூன்றாவது தங்கத்தை இந்தியாவுக்காக வென்று கொடுத்தார், நம் தங்கமகன் மாரியப்பன்!
- மாரியப்பனின் வெற்றிக்குப் பின்னால் இருப்பவர், அவரது அம்மா சரோஜா. மாரியப்பனோடு சேர்த்து அவருக்கு நான்கு பிள்ளைகள். கணவனின் துணையில்லாமல் தனியொரு ஆளாக அவர் எல்லோரையும் வளர்த்தெடுத்தார். அவ்வளவு போராட்டத்திலும் மாரியப்பனின் காலை சரிசெய்வதற்காக மூன்று லட்சம் வங்கிக்கடன் வாங்கி முயன்று பார்த்திருக்கிறார், சரோஜா. இப்போது அவரை நன்றாகப் பார்த்துக்கொள்ளும் இடத்துக்கு வந்துசேர்ப்பதையே, மாரியப்பன் உண்மையான வெற்றியாகச் சொல்கிறார்.
- மாரியப்பன் இதுவரை சுயசரிதை எதுவும் எழுதவில்லை. ஆனால், அவரது வாழ்க்கை வரலாற்றுப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்துக்கொண்டிருக்கிறார், அது வெளிவரும்போது, நமக்கு மாரியப்பனின் வாழ்க்கை குறித்த கூடுதல் கோணங்கள் தெரியவரும்.
- 2020 ஆம் ஆண்டு மாரியப்பனுக்கு ‘ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது’ அறிவித்து பெருமை சேர்த்தது இந்திய அரசு! இந்திய விளையாட்டுத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருது அது!