leader-profile-image

எஸ். இளவழகி

  • இந்தியாவுக்கு தமிழகம் தந்த ’காயின் குயின்’ இளவழகி! 
  • தமிழகத்தின் கேரம் தலைநகரமான வடசென்னையில் உருவானவர் தான் இளவழகியும். அவரது அப்பா இருதயராஜ் ஒரு சாதாரண மீன் வியாபாரி. இளம் வயதில் இளவழகியின் வீட்டில் சொந்தமாக ஒரு கேரம்போர்டு கூட இல்லை. பள்ளி ஆண்டுவிழா ஒன்றில் அவர் ஜெயித்தபோது அவருக்கு ஒரு கேரம்போர்டு பரிசாகக் கிடைத்தது. அதைக்கொண்டு தான் அவர் கேரம் விளையாட ஆரம்பித்தார்.
  • இளவழகி இந்தியாவுக்கு இதுவரை மூன்று கேரம் உலக சாம்பியன் பட்டங்களை வாங்கிக் கொடுத்திருக்கிறார். அவரது இல்லம் முழுவதும் மெடல்களின் அணிவகுப்பை நம்மால் பார்க்க முடியும். தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடந்த போட்டிகளில் கலந்துகொண்டு, 260 மெடல்களை வாங்கிக்குவித்திருக்கிறார். இன்னொரு வடசென்னை கேரம் மாமேதையான மரிய இருதயத்தின் சரியான வழித்தோன்றல், இளவழகி!
  • இளவழகி இப்போதும் வறுமையில் தான் இருக்கிறார். ஆனால், அவரது கனவை வசதியாகவே வைத்திருக்கிறார். வியாசர்பாடியிலேயே ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து இளம் கேரம் விளையாட்டு வீரர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.
  • ஐஐடியில் படித்த பணக்கார மாணவர்கள் எல்லோரும் இந்தியாவை விட்டு அமெரிக்காவிலோ இங்கிலாந்திலோ செட்டில் ஆவதை நாம் பார்க்கிறோம். ஆனால், இளவழகிக்கு அப்படியொரு வாய்ப்பை பிரான்ஸ் அரசாங்கம் அளித்தபோது, இந்தியராக நின்று அவர் அதை நிராகரித்து விட்டார். பிரான்சில் நடந்த உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் பட்டம் வென்றபோது நடந்தது அது. ’இனி எங்கள் நாட்டுக்காக ஆடுங்கள். மாதம் 5 லட்சம் ஊக்கத்தொகை, தங்க தனிவீடு எல்லாம் தருகிறோம்’ என்று சொன்னது பிரான்ஸ் அரசு. ஆனால், ‘என் திறன் எப்போதும் என் இந்தியாவுக்கே பயன்படும்’ என்று நெஞ்சம் நிமிர்த்தி சொன்னார், இளவழகி!
  • இந்திய அரசு வழங்கும் அர்ஜூனா விருது நிறைய விளையாட்டு வீரர்களுக்கு வெறும் ‘கனவு’. ஆனால், இளவழகிக்கு அது ‘லட்சியம்’! எல்லா வகையிலும் தகுதியானவராக இருந்தும் இளவழகிக்கு இன்னும் அர்ஜூனா விருது வழங்கப்படவில்லை. அவரது மாணவர்களில் ஒருவரேனும் அர்ஜூனா விருது வாங்கிக்கொடுத்து விடவேண்டும் என்று உழைத்துக் கொண்டிருக்கிறார்!