ரமேஷ் கிருஷ்ணன்
- இன்றைய தலைமுறைக்கு இவரை அவ்வளவாக தெரியாது. ஆனால், 1970, 80களில் டென்னிஸ் உலகில் கொடிகட்டிப் பறந்த தமிழர், ரமேஷ் கிருஷ்ணன்!
- ரமேஷ் கிருஷ்ணன் டென்னிஸ் சூழ வளர்ந்தவர். அவரது அப்பா ராமநாதன் கிருஷ்ணன் மற்றும் அவரது தாத்தா ராமநாதன் இருவருமே இந்தியாவின் மிகமுக்கியமான டென்னிஸ் ஆளுமைகள். ராமநாதன் கிருஷ்ணன் 1959ம் ஆண்டு உலக டென்னிஸ் தரவரிசையில் மூன்றாம் இடம் வரை முன்னேறி சாதனை படைத்தவர். அந்த வழியில் வந்தவர், ரமேஷ் கிருஷ்ணன்.
- ரமேஷ் கிருஷ்ணனுக்கு சாப்பாடு, தூக்கம், கனவு எல்லாமே டென்னிஸ் தான். அவருக்கு பொழுது விடிவதும் முடிவதும் டென்னிஸ் கோர்ட்டில் தான். டென்னிஸ் ராக்கெட் ஒரு மூன்றாம் கரம்போல அவர் கூடவே எப்போதும் இருந்தது. இதனால் தான், 16 வயதியேலேயே தேசிய சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார், ரமேஷ் கிருஷ்ணன். அது 1977ல் நடந்தது. அடுத்த இரண்டு வருடத்தில் அவர் பிரெஞ்சு ஓபன் மற்றும் விம்பிள்டன் தொடர் களிலும் அவர் ஜூனியர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம், உலக ஜூனியர் டென்னிஸ் தரவரிசையிலும் முதலிடத்தைப் பிடித்தார். இது இன்றுவரை எந்த இந்தியராலும் உடைக்கமுடியாத சாதனை!
- ரமேஷ் கிருஷ்ணன் கோலோச்சிய 1980 – 1990 காலங்களை, இந்திய டென்னிஸின் பொற்காலம் எனலாம். அவரது காலத்தில் தான், ஒலிம்பிக் காலிறுதி, டேவிஸ் கோப்பையில் அரையிறுதி, விம்பிள்டன் மற்றும் யுஎஸ் ஓபனில் காலிறுதி என இந்தியா தொடர்ச்சியாக உலக அரங்கில் பேசப்பட்டது. அப்புறம், லியாண்டர் பயஸூம் மகேஷ் பூபதியும் இந்திய டென்னிஸை இன்னும் அதிக உயரங்களுக்கு எடுத்துச் சென்றார்கள்.
- ரமேஷ் கிருஷ்ணன் 1993ம் ஆண்டு டென்னிஸில் இருந்து விலகினார். அவரது அடுத்த அவதாரம் ‘பயிற்சியாளர்’! 1995ம் ஆண்டு ‘கிருஷ்ணன் டென்னிஸ் அகாடமி’யை அவர் சென்னையில் தொடங்கினார். இன்றுவரை தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்படும் ஒரு விளையாட்டு அகாடமியாக அது திகழ்கிறது!
- ரமேஷ் கிருஷ்ணனின் மகள் காயத்ரி கிருஷ்ணனும் இப்போது இந்தியாவின் குறிப்பிடத்தக்க டென்னிஸ் வீராங்கனை!