leader-profile-image

சதீஷ் சிவலிங்கம்

  • தமிழகத்தின் மொத்த நம்பிக்கையையும் எடைக்கல்லாக உருமாற்றி, காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் வென்ற முதல்தமிழன், சதீஷ் சிவலிங்கம்!
  • சதீஷ் இதுவரை இரண்டு காமன்வெல்த் தங்கங்களை வென்றிருக்கிறார். 2014ல் கோல்ட்கோஸ்டில் நடந்த காமன்வெல்த் போட்டியில், அவர் 328 கிலோ எடையைத் தூக்கி தங்கம் வென்றார். அடுத்து, 2018ம் ஆண்டு கிளாஸ்கோவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் அவருக்கு 317 கிலோவே போதுமானதாக இருந்தது, தங்கத்துக்கு!
  • சதீஷ், வேலூரில் பிறந்தார். மிகவும் எளிய குடும்பம். அப்பா, எக்ஸ் – சர்வீஸ்மேன். இப்போது, விஐடி கல்லூரியில் அவர் வாட்ச்மேன் வேலை பார்க்கிறார். இப்படியொரு பின்னணியில் இருந்து எழுந்துவந்து சதீஷ் சிவலிங்கம் தங்கம் வென்றதை சாதனை என்பதை விட, சாகசம் என்பதே சரியாக இருக்கும்!
  • 2014ம் ஆண்டு காமன்வெல்த் இறுதிப்போட்டிக்கு முந்தைய இரவு சதீஷூக்கு எப்படியிருந்தது? ‘மனமெங்கும் ரணம். என்னை வெறுத்தவர்கள் மற்றும் சந்தேகித்தவர்களின் முகங்கள் என் முன்னால் நிழலென வந்துபோயின. எத்தனை வார்த்தைகள். என்னால் நிற்கக்கூட முடியவில்லை. ஆனாலும், இந்த தங்கத்தை வெல்லாமல் ஊர் திரும்பக்கூடாது என்று உறுதியாக இருந்தேன்’ என்கிறார், சதீஷ் சிவலிங்கம். வென்றுவிட்டே ஊர்திரும்பினார்!
  • உண்மையில், 2014ம் ஆண்டு தங்கத்தை விட, 2018ம் ஆண்டு தங்கம் சதீஷூக்கு கடினமானதாக இருந்தது. ஏனென்றால், 2018ம் ஆண்டில் அவர் கடுமையான தொடைவலியால் அவதிப்பட்டார். காயங்கள் விளையாட்டு வீரர்களுக்கு நிகழ்வது இயல்பே. சதீஷூக்கும் அது முன்னால் நடந்திருக்கிறது. ஆனால், இந்த முறை வலி உயிர்போனது. எப்படியோ சமாளித்து, அந்த ஆண்டு நடந்த தேசிய பளுதூக்கும் போட்டியில் வெள்ளி வென்றார். ஆனால், வெள்ளி அவரை நிறைவுறச் செய்யவில்லை. ‘தேசியப்போட்டியிலேயே வெள்ளி என்றால், சர்வதேச காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் கூட கிடைக்காது’ என்று எல்லோரும் பேசினார்கள். ஆனால், சதீஷ் உறுதிகொண்டார். உடற்காப்பாளர் வருண் ஷெட்டியின் உதவியுடன் மிகச்சில மாதங்களிலேயே மீண்டெழுந்தார். அதன்பின்பு காமன்வெல்த்தில் தங்கம் வென்று, வலிகொண்ட அதே தொடையை தட்டி அவமதித்தவர்களை நோக்கி ஆர்ப்பரித்தார், சதீஷ்! அப்போது அவர் சொன்னது மிகமுக்கியமான வார்த்தைகள்… ‘I’m a sportsman. inujries and recoveries are hobby to me’!
  • இந்தியா எந்த அளவுக்கு விளையாட்டு வீரர்களுக்கு உவக்காத சூழ்நிலையைக் கொண்டிருக்கிறது என்பதற்கு, சதீஷ் சிறந்த உதாரணம். 2014ம் ஆண்டுக்கு பிறகு தான் சதீஷூக்கு எல்லாப் புகழுமே. அதற்கு முன்னால், அவர் நம்பப்படாதவராக இருந்தார். அவர் பணிசெய்த ரயில்வேஸிலும் அதே தான் நிலை. தெரியுமா? 2013ம் ஆண்டு தேசியப்போட்டியில் கலந்துகொள்ள சதீஷூக்கு முதலில் அனுமதி அளிக்கப்படவில்லை. பல மாதங்கள் போராடியே அவர் அனுமதி பெற்றார். அப்போதும், ‘இத்தனை நேரம் தான் பயிற்சி செய்யவேண்டும். அப்புறம் பணிக்கு வந்து விடவேண்டும்’ என்று ஏகப்பட்ட நிபந்தனைகள். துறை சார்பாகவும் எந் பண உதவியும் இல்லை. சதீஷின் பெற்றோர்கள் உறவினர்களிடம் கடனாக வாங்கிய காசில் தான், பயிற்சி நடந்தது. இத்தனையையும் கடந்தே, 2014ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிக்குச் சென்று தங்கம் வாங்கிவந்தார், சதீஷ். இப்போது எல்லோரும் அவரைப் பார்த்து புன்னகைத்தார்கள். அவருக்கு அனுமதி மறுத்த ரயில்வே மேலதிகரி உட்பட! Yes, Life is a circle!
  • மற்ற விளையாட்டுகளை போன்றதல்ல, தடகளம். அது கொஞ்சம் அதிகமதிப்பு மிக்கது. ஏனென்றால், தடகளத்தில் உங்களுக்கு விளையாட ஸ்டிக்கோ, பாலோ எதுவுமே அளிக்கப்படாது. நீங்கள் மட்டும் தான். விளையாடுவது உங்கள் உடல் மட்டும் தான். அதைக்கொண்டு நீங்கள் ஓடவேண்டும், எறியவேண்டும், தாண்டவேண்டும், சுமக்கவேண்டும். சதீஷ் சுமக்கும் விளையாட்டான எடைதூக்குதலில் இருந்தார். பொதுவாக, எடைதூக்குதல் வருடத்தின் எல்லா நாளும் உணவுக்கட்டுப்பாட்டை கோருவது. ஒருநாள் விட்டாலும், அந்த கட்டுப்பாட்டுச் சங்கிலி அறுபடும். ஆகவே, மிகவும் சிரமப்பட்டு, கிடைத்த மிகச்சொற்ப பணத்தில், உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொண்டார், சதீஷ். இதனால், அவரது உடல் வளர்ச்சியே கூட ஒரு கட்டத்தில் நின்றது. ஆனாலும், லட்சியத்தை ஒரு தவமெனக் கருதி வென்றார், சதீஷ்!
  • சதீஷூக்கு நிறைய வகைகளில் உதவியாக இருந்தது, Go Sports அமைப்பு. ராகுல் டிராவிட்டின் பரிந்துரையின் பேரில், அந்த அமைப்பு சதீஷூக்கு உதவ முன்வந்தது. எனவே, எந்த வெற்றிமேடையில் பேசினாலும், ‘Go Sports’ அமைப்பையும், ராகுல் டிராவிட்டின் உதவியையும் மறக்காமல் நினைவுகூருவார், சதீஷ் சிவலிங்கம்.
  • சதீஷூக்கு 2015ம் ஆண்டு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது. ஆனால், அவரது கனவு ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருதை அடைவதே. ஏனென்றால், இதுவரை எந்த பளுதூக்கும் வீரருக்கும் ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது அளிக்கப்படவில்லை. ’அதை அடைவேன். அடைந்து என் சகவீரர்களுக்கும் பெருமை சேர்ப்பேன்…’ என்று சபதம் எடுத்திருக்கிறார், சதீஷ். அதே போல, ஒலிம்பிக் பதக்கமும் அவரது கனவுகளில் முக்கியமானது!
  • ‘உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள்’… இது தான் ஒரு வெற்றிகரமான விளையாட்டு வீரராக சதீஷ் சிவலிங்கம் மற்றவர்களுக்கு சொல்ல விரும்புவது!