வனிதா மோகன் (Pricol)
- 2000 கோடி ரூபாய் அளவுக்கு மதிப்பு கொண்ட Pricol நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கும் பெண் ஆளுமை, வனிதா மோகன். கூடவே, சிறுதுளி என்ற தன்னார்வ அமைப்பின் மூலம் கோயம்புத்தூரை தூய்மையான நகரமாக உருமாற்றவும் உழைத்துக் கொண்டிருக்கிறார், அவர்!
- வனிதா மோகன் Pricol நிறுவனத்தை தொடங்கியவர் அல்ல. அந்தப் பங்களிப்புக்கான Credit வனிதாவின் இணையர் விஜய் மோகனையே சாரும். ஆனால், 2000திற்கு பிறகு Pricol நிறுவனம் அடைந்த வளர்ச்சிக்கு மிகமுக்கிய காரணம், வனிதா மோகனின் தலைமைத்துவமே. அவரது, வித்தியாசமான மற்றும் உறுதியான தலைமைத்துவ கொள்கைகளே, இன்றும் Pricol நிறுவனத்தின் முதல் முதலீடு!
- ஒருவிதத்தில், Pricol நிறுவனத்தை தமிழ்நாட்டின் பிற நிறுவனங்களுக்கான முன்னுதாரண நிறுவனம் என்று சொல்லலாம். ஏனென்றால், பாலினப்பாகுபாடு ஒரு முக்கிய பிரச்சனையாக இருக்கும் காலத்தில், Pricol நிறுவனத்தின் 25 சதவிகித பணியிடங்களை பெண்களுக்கென்று ஒதுக்கியிருக்கிறார், வனிதா மோகன். இதன் வழியே, நூற்றுக்கணக்கான பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்று நல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ளனர்!
- பெயர் தான் சிறுதுளி. ஆனால், அந்த சிறுதுளியின் வாயிலாக வனிதா மோகன் செய்து கொண்டிருப்பது எல்லாமே பெரும் பணிகள். இன்றைய தேதியில் நீங்கள் கோவையில் சுற்றுச்சூழல் சார்ந்து எந்த முன்னெடுப்பைப் பார்த்தாலும், ஒன்று அது சிறுதுளி செய்வதாக இருக்கும் அல்லது சிறுதுளியின் ஆதரவோடு வேறு யாராவது செய்வதாக இருக்கும். அந்த அளவுக்கு சிறுதுளியின் சமூகப்பங்களிப்பை சீராக உச்சத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார், வனிதா மோகன்! நிறைய உண்டு. ஆனால், நொய்யல் ஆற்றை சுத்தம் செய்து அதன் படுகைகளை மீட்டெடுத்தது வனிதா மோகனின் குறிப்பிட வேண்டிய சூழலியல் சாதனை!
- சிறுதுளி அமைப்பின் வழியே செய்யும் சமூகப்பணிகளை கடந்து, ஒரு சூழலியலாளராக வனிதா மோகனின் குரல் சமூகத்துக்கு தேவையான ஒன்று. நிலத்தடி நீரை அநியாயமாக உறிஞ்சிக்குடிக்கும் போர்வெல் அரக்கத்தனம், ஆற்றுப்படுகைகளை அநீதியாக அழிக்கும் மணற்கொள்ளை குற்றம், நீர்நிலைகளில் குப்பைகளைக் கொட்டி அசுத்தப்படுத்தும் மோசமான செயல் என எல்லாவகையான சூழல் அழிப்புக்கு எதிராகவும் உரக்கப் பேசுபவர், வனிதா மோகன். ஒரு நிகழ்வில், ‘கோயம்புத்தூரில் மட்டும் கடந்த சில ஆண்டுகளில் 5 லட்சம் போர்வெல்கள் உருவாகியிருக்கின்றன. கோயம்புத்தூரி லேயே இப்படியென்றால், தமிழ்நாடு முழுக்க நினைத்துப்பார்க்கவும்…’ என்று அவர் புள்ளிவிவரங்களை அடுக்கியபோது, அரங்கத்தினர் அவர்களையே அறியாமல் சில கணம் நடுங்கினார்கள்.
- பார்ப்பதற்கு வேண்டுமானால் வனிதா மோகன் கடினமானவராகவும், எளிதில் உடைத்து உள்நுழைய முடியாதவராகவும் தோன்றலாம். ஆனால், நேசத்திலும் பாசத்திலும் அவர் தனித்துவமானவர்! வனிதா மோகனின் தொழில்முனைவு மந்திரமும் கூட ‘நேசம்’ என்ற ஒரே வார்த்தையில் அடக்கக்கூடிய அளவுக்கு மிக எளிமையானதே!
- கோயம்புத்தூர் தொழில் நகரம். அத்தகைய நகரத்தில், இந்திய வர்த்தக சபையின் (India’s Chamber of Commerce and Industry, Coimbatore) தலைவராக உயர்ந்த முதல் பெண் என்ற பெருமைக்குரியவர், வனிதா மோகன். பெண் என்பதாலேயே உயர்பதவி வாய்ப்புகள் மறுக்கப்படும் ஒரு நிலத்தில், வனிதா அந்த பதவியை அடைந்தது மிகமுக்கிய சமூகநகர்வு!
- ‘சில தோல்விகளுக்காக நிறுவனத்தின் மீது நம்பிக்கை இழக்காதீர்கள். முதலில், அந்த தோல்விகளுக்கான அடிப்படைக் காரணம் என்னவென்று பாருங்கள். அதைத் தீர்வு நோக்கி கொண்டு செல்லுங்கள். பிறகு, உங்களின் தொழில்மாதிரியின் வெற்றி உறுதிசெய்யப்பட்டு விடும்…’ என்பது, வளர்ந்து வரும் தொழில்முனைவோர்களுக்கான வனிதா மோகனின் உத்வேக வார்த்தைகள்!
- ‘Ability to do good things is the real freedom…’ என்பது வனிதா மோகன் நம்பும் கொள்கை. அதாவது, ‘நாம் செய்ய நினைக்கிற நல்ல காரியங்களை செய்ய முடிகிற அளவுக்கான சூழ்நிலையை உருவாக்கிக்கொள்ளுதலே உண்மையான சுதந்திரம்’ என்பார், அவர்!