leader-profile-image

கலைஞர்

  • தமிழ், தமிழர், தமிழ்நாடு… இந்த மூன்றுக்காக முடிவில்லாமல் சிந்தித்த, செயல்பட்ட மாபெரும் தலைவர், கலைஞர் மு. கருணாநிதி! இன்று இந்நிலத்தில் நாம் அனுபவிக்கும் பெரும்பாலான வளர்ச்சிகள், அவரின் கறுப்புக் கண்ணாடிக்கு பின் உருண்ட இரண்டு விழிகளும் கனவுகண்டு விரித்தெடுத்தவையே ஆகும்!
  • கலைஞரைப் போல மொழியறிவும், அரசியல் அறிவும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற அரசியல் தலைவர்கள் உலக நிலத்திலேயே வெகு அரிது. பின்னோக்கிப் பார்த்தால், ஞானமும் அரசு திறனும் ஒன்றென திரண்ட மகா சக்கரவர்த்தி அசோகர் மட்டுமே அப்படி கண்ணுக்குத் தெரிகிறார். அசோகரேனும் அரச குலத்தில் வாய்த்தார். ஆனால், கலைஞர் மிகச்சிறுபான்மையான ஒரு சமூகத்தில் இருந்து எழுந்து வந்து அரசு செலுத்தினார்! ஆனால், சிறுபான்மை சமூகம் என்று கலைஞர் எந்த இடத்திலும் தாழ்வுணர்ச்சி கொள்ளவில்லை. ‘எவனாவது இனி எங்களை அழுத்தினால், அவன் பட்டை உரியும், சுடுகாட்டில் அவன் கட்டை எரியும்…’ என்று வெறிகொண்டு திமிராக சொன்னார்!
  • இந்திய நிலத்தில் கலைஞர் அளவுக்கு காழ்ப்புகளையும், வெறுப்புகளையும் எதிர்கொண்ட இன்னொரு தலைவர் இல்லை. தமிழ் நிலத்திலேயே அவரை இன்னும் புரிந்துகொள்ளாத மனிதர்களே அதிகம். ஆனால், ‘மயிலென்றாலும் சரி, மந்தியென்றாலும் சரி, எடுத்த காரியத்தை இலக்கு சேர்க்காமல் என் உயிர் பிரியாது…’ என்று வெற்றிக்கொடி நாட்டியபடியே முன்சென்றார், கலைஞர். இந்தியாவிலேயே எதிர்கொண்ட எந்த தேர்தலிலும் தோற்காத ஒரே அரசியல்வாதி, கலைஞர் மட்டுமே! 95 வயதில் மறைந்தபோது, அவர் 13 முறை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் 5 முறை தமிழக முதலமைச்சர்!
  • பெரியார் சிந்தித்தார், அண்ணா பேசினார், ஆனால், கலைஞரே அதையெல்லாம் செயல்படுத்தி காட்டினார்! உதாரணம் சொல்ல வேண்டுமானால், ‘பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும்’ என்று பெரியார் சிந்தித்தார்; அண்ணா பேசினார்; ஆனால், கலைஞர் தான் ஆட்சிக்கு வந்து, ‘பெண்களுக்கும் இனி சொத்தில் சம உரிமை உண்டு’ என்று சட்டம் இயற்றினார். சமத்துவபுரம் போன்ற சாதிகடந்த கட்டமைப்புகள், பெரியாரும் அண்ணாவுமே கண்டிராத அற்புதக்கனவுகள் என்று வகைப்படுத்தத் தக்கவை!
  • சமூகத்தில் மிகச்சொற்பமாக இருக்கும் தரப்பினருக்கும் சேர்த்து சிந்தப்பவனே உண்மையான மக்கள் தலைவன்! அந்த விதத்தில், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் / திருநம்பிகள் போன்றவர்களுக்கும் தனியாக நலவாரியம் அமைத்து, சிறப்பு சலுகைகள் வழங்கி காத்தார், கலைஞர்! அந்த இரண்டு சொற்றொடர்களை உருவாக்கி அளித்தவரும் கூட கலைஞரே! அதனால் தான், ஆகஸ்ட் 7 , 2018 அன்று காவிரி மருத்துவமனைக்கு வெளியே நின்று, ‘எங்களின் தலைவர்…’ என்று, மாற்றுத்திறனாளிகளும், மாற்றுப்பாலினத்தோரும் அவருக்கு உயிருருக அஞ்சலி செலுத்தினர்!
  • தமிழ்நாட்டுக்காக கலைஞர் செய்தவை பல. இந்தியாவிலேயே முதன்முறையாக தகவல் தொழில்நுட்பக் கொள்கையை அவர் தான் அறிவித்தார். சென்னையின் டைடல் பார்க் அவரது உழைப்பின் மைல்கல். மனிதனை மனிதனே சுமக்கும் `கை ரிக்சா’ எனும் கொடும் இழிவை கலைஞர் தான் ஒழித்தார். `ஊருக்கு ஒரு ரேஷன் கடை’ எனும் திட்டமும் கலைஞரின் முதல் ஆட்சிக் காலத்திலேயே நடைமுறைக்கு வந்தது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகமும் அவரது உருவாக்கமே. இப்படி நூறு, ஆயிரம் திட்டங்களை பட்டியலிடலாம். ஆகையால் தான், ‘நவீன தமிழகத்தின் தந்தை’ என்று கலைஞரை எல்லோரும் அழைத்தனர் மற்றும் அழைக்கின்றனர்!
  • முக்கடல் சந்திக்கும் குமரியில் முப்பால் தந்தவருக்கு சிலையெடுத்தவர், கலைஞர்! வானுயர்ந்து நிற்கும் அந்த வள்ளுவன் சிலை நம் அடையாளம் மட்டுமல்ல, அதையும்தாண்டி, ‘இந்தியாவை வடக்கிலிருந்து பார்க்காதே தெற்கிலிருந்து பார்’ என்று நாம் அகிலத்துக்கு விடுக்கும் அறைகூவலும் கூட!வள்ளுவர் மட்டுமல்ல, வள்ளுவத்தையும் மக்கள்மயமாக்கினார், கலைஞர். பேருந்துகள், அரசு அலுவலகங்கள், பள்ளி மதில்கள் என சாமானிய மக்களின் கண்கள் படும் இடமெங்கும் திருக்குறளைப் பொறித்து, அதைச் சாதித்தார், கலைஞர். திருக்குறளுக்கு இதுவரை தமிழில் எழுதப்பட்ட உரைகளில் மிகச் சிறந்தவை என்று இரண்டு உரைகளையே சொல்ல முடியும்… ஒன்று மு.வ. உடையது என்றால் இன்னொன்று மு.க. உடையது.
  • கலைஞர் இறந்தபிறகு, அவருக்கு அஞ்சலி செலுத்தியவர்களில் முக்கியமானவர்கள், தமிழக தொழில்துறையினர். அதுவரை கலைஞரைப் பற்றி எங்கும் அவ்வளவாக பேசாத அவர்கள், அப்போது மேடைக்கு வந்து மொத்தமாக கொட்டித்தீர்த்தார்கள். ‘தமிழகத்துக்கு ஒரு நலன் முக்கியமானதாக தோன்றினால், எந்த நேரத்திலும் எவரிடமும் பேசத்தயங்க மாட்டார், கலைஞர்’ என்று, அன்று அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் கலைஞரின் கழுத்தில் விழுந்த இயந்திரமாலைகள்! தொழில்வளர்ச்சியில் எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அதே அளவுக்கு விவசாயத்தின் மீதும் ஆர்வம் செலுத்தினார், கலைஞர். அவரது உழவர் சந்தை, இடைத்தரகர்களே இல்லாமல் விவசாயிகள் நேரடியாக விளைபொருட்களை விற்க வழிவகுத்தது. தமிழக விவசாயிகளுக்கு இலவச மின்சாரமும் அவர் மனமுவந்து அளித்த கொடையே!
  • தலைநகர் சென்னையை, தலைமகனென கருதி செதுக்கியவர், கலைஞர்! கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் நடப்போர் அவரது கலைநயத்தை உணர்வர். சிப்காட் தொழிற்பேட்டையை காண்போர் அவரது தொழில் தொலைநோக்கை வியப்பர். அண்ணா நூலகத்திற்குள் நுழைவோர் அவரின் அறிவு வேட்கையை அறிவர். சென்னை அண்ணாசாலையில் கலைஞர் கட்டிய தலைமைச்செயலகம் இன்று தலைமைச்செயலகமாக இயங்காமல் இருக்கலாம். ஆனால், இப்போதும் அந்த பேருந்து நிறுத்தம், ‘நியூ செக்ரட்டரியேட்…’ என்றே மக்களின் மனதில் பதிந்திருக்கிறது!
  • ஒரு உயர்ந்த தலைவன், அவன் வந்தவழியையும் அவனுக்கு கற்றுக்கொடுத்த ஆசான்களையும் எப்போதும் மறக்கமாட்டான். அந்த விதத்தில், பெரியாரையும் அண்ணாவையும் இறுதிமூச்சுவரை நெஞ்சத்தில் இருத்திப் போற்றினார், கலைஞர். சென்னை மவுண்ட் ரோட்டுக்கு அவர் வைத்த பெயர், அண்ணா சாலை. ஆசியாவிலேயே பெரிய நூலகத்துக்கு அவர் வைத்த பெயர், அண்ணா நூலகம். சமத்துவபுரத்திற்கு அவர் சூட்டிய பெயர், பெரியார் நினைவு சமத்துவபுரம்!ஒரு இனிய சம்பவம்… கலைஞர் அப்போது பேசும் திறனிழந்து படுக்கையில் இருந்தார். அவருக்கு பேச்சுப்பயிற்சி அளிக்க முயல்கிறார்கள், மருத்துவர்கள். ‘சார், நீங்க பேசலாம்… உங்களுக்கு எந்த வார்த்தை முதலில் நினைவுக்கு வருகிறதோ அதைச் சொல்லலாம்…’ என்கிறார், தலைமை மருத்துவர். கலைஞர் கண்திறக்கிறார். ஏதோ சொல்வதற்கு வாயெடுக்கிறார். எல்லோரும், ‘அம்மா என்பாரா, அப்பா என்பாரா, ஸ்டாலின் என்பாரா, கனிமொழி என்பாரா…’ என்று பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், ‘அண்ணா…’ என்கிறார், கலைஞர்! அடுத்து அவர் என்ன சொன்னார் என்பது பதிவாகவில்லை. கண்டிப்பாக, அது பெரியார் என்றே இருந்திருக்க வேண்டும்!
  • காமராஜருக்குப் பிறகு தேசிய அளவில் தாக்கம் செலுத்திய ஒரு தமிழக அரசியல்வாதி, கலைஞர். ஐக்கிய முற்போக்கு கூட்டணியாக இருந்தாலும் சரி, தேசிய ஜனநாயக கூட்டணியாக இருந்தாலும் சரி, எந்த பெரிய சட்டம் கொண்டுவருவதாக இருந்தாலும், கலைஞரையும் ஒரு சொல் கேட்பார்கள். சமூகநீதிக்காக நின்ற வி.பி.சிங், தெற்கில் இருந்து சென்ற தேவகெளடா போன்றவர்களைப் பிரதமராக்கியதில், கலைஞருக்கு நிறைய பங்கு உண்டு! இங்கே ஒரு தகவல்… ஜெயலலிதா பிரதமர் கனவில் சில வேலைகள் செய்துகொண்டிருந்த பொழுது, ‘கலைஞருக்கு அந்த மாதிரி எந்த ஆசையும் இல்லையா’ என்று அவர் மகள் கனிமொழியிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, கனிமொழி சிரித்தபடியே, ’எனக்குத் தெரிந்து அவரை ஒருமுறை குடியரசுத்தலைவர் பதவிக்கு கேட்டிருக்கிறார்கள். ஆனால், ‘நான் தமிழ்நாட்டை தாண்டி எண்ணாதவன்’ என்று அவர் மறுத்துவிட்டார்’ என்று பதில் சொன்னார்.
  • கலைஞர், ரசனைக்காரர்! சில உதாரணங்களைச் சொல்லலாம்… ஒரு பெண் நிருபர் அவரிடம் ஒருமுறை, உங்களுக்கு பிடித்த உணவு என்னவென்று கேட்கிறார். சாதாரண தலைவர்கள், ஏதோவொரு உணவுப்பெயரை எளிதாக சொல்வார்கள். ஆனால், கலைஞர் அதற்கு இப்படி பதில் சொல்கிறார்… ‘அப்பா பிடித்து அம்மா சமைத்த மீன் குழம்பு பிடிக்கும். ஆனால் இன்று மீன்பிடிக்க அப்பாவும் இல்லை, மீன் சமைக்க அம்மாவும் இல்லை, மருத்துவர் அளித்த உணவுப் பட்டியலில் மீனும் இல்லை’! அதே போல பிரபாகரன் மறைந்தபோதும் ஒரு பதில்! அப்போது, பிரபாகரன் தப்பித்து வேறுநாடுகளுக்கு சென்றிருக்கக்கூடும் என்ற தகவல் நிலவியது. நிருபர்கள் கேட்கிறார்கள்… ‘சார், பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா…’? கலைஞர் யோசிக்கிறார். உடனே அடிக்கிறார்… ‘மாவீரன் மரிப்பதில்லை’! பேட்டிகள் என்றில்லை. மேடைப்பேச்சிலும் கலைஞரிடம் ரசனை புகுந்து விளையாடும். அது, மாநிலத்தின் தெற்கே கன்னியாகுமரியில் நடந்த ஒரு பொதுக்கூட்டம். கன்னியாகுமரி தேசியம் கலந்த மண். எனவே, அங்கு திமுக எப்போதுமே வலுவாக இருந்ததில்லை. கலைஞர் அதை இரண்டே வரியில் நயத்தோடு உணர்த்துகிறார்… ‘ நெல்லை எங்களுக்கு எல்லை! குமரி எங்களுக்கு தொல்லை…’!
  • தமிழ் சினிமாவின் திசையை மாற்றிய படம், கலைஞரின் ‘பராசக்தி!’ அதுவரை இங்கே எல்லாமே, ‘நாதா… சுவாமி… அத்தான்…’ தான். ஆனால், கலைஞர் பராசக்தியில் பேனாவை ஊன்றி, ஈரெழு கரம் கொண்டு எழுந்து ஊழிக்கூத்தாடினார். அதில், அவர் தீட்டிய ‘அடேய் பூசாரி… அம்பாள் எந்த காலத்திலடா பேசினாள்…’ என்ற வசனம், இன்றுவரை சனாதனிகளை அலறவைத்துக் கொண்டிருக்கிறது. அடுத்து, மனோகராவில் ‘வட்டமிடும் கழுகு… வாய்பிளந்து நிற்கும் ஓநாய்…’ என்று அவர் எறிந்தவை எல்லாமே, சர்வாதிகார அரசுகளை நோக்கிய சவுக்கடிகள்! நடைதளர்ந்த கால்களுடன் நாற்காலியில் வலம் வந்தபோதும், ‘ராமானுஜம்’ எழுதி மதச்சீர்திருத்தம் பரப்பினார், கலைஞர்!
  • இலவசங்களை மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த பயன்படுத்தமுடியும் என்று, இந்தியாவில் முதன்முறையாக உணர்த்திய ஆட்சியாளர், கலைஞர்! அவரது இலவச தொலைக்காட்சி, இலவச வீட்டுமனைப் பட்டா எல்லாமே தமிழ்நாட்டைக் கொண்டு, இந்தியாவுக்காக அவர் முன்னிறுத்திய திட்டங்கள்! அதையே இப்போது, ‘இலவச ஸ்மார்ட்ஃபோன், இலவச கைக்கடிகாரம்…’ என, மற்ற மாநிலத்தலைவர்கள் விரித்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்! 
  • ‘கலைஞருக்கு தமிழில் எல்லாம் பிடிக்கும், ‘ஓய்வு’ என்ற வார்த்தையை தவிர’ என்பார்கள். ஆம்! முரசொலியில் காந்திக் கொலையை விமர்சித்தது முதல் முகநூலில் கல்விக் கொள்கையை விமர்சித்தது வரை, அவர் இயங்கிக் கொண்டே இருந்தார். பொதுவாக, வீசும் பணியில் ஏற்ற இறக்கமோ, தொய்வோ, சோம்பலோ எதுவுமே கொள்வதில்லை, காற்று! கலைஞர் அப்படியொரு காற்று!